search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் அரசு பள்ளியில் குறைந்த மாணவர் சேர்க்கையால் கல்வித்தரம் கேள்விக்குறி
    X

    கோப்பு படம்

    கொடைக்கானலில் அரசு பள்ளியில் குறைந்த மாணவர் சேர்க்கையால் கல்வித்தரம் கேள்விக்குறி

    • கொடைக்கானலில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையும் தேர்ச்சி விகிதமும் சரிவு

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் 1920ம் ஆண்டில் அரசுப் பள்ளி தொடங்கப்பட்டது. 100 ஆண்டுகளைக் கடந்து தற்போது அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது. ஆனால் இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் மந்தமாக உள்ளது.

    பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து இந்த பள்ளியில் படித்தவர்கள் அரசு வேலைகளிலும் தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.

    ஆனால் தற்போது இங்கு மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதற்கு பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.பள்ளிக்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு முறையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி இல்லை என்பதால் மாணவ-மாணவிகள் இங்கு கல்வி பயில வரத்தயங்குவதாக தெரிவிக்கின்றனர்.

    கொடைக்கானல் மலைப்பகுதியில் தனியார் பள்ளியில் குழந்தைகளைப் படிக்க வைக்க வசதியில்லாத பின்தங்கியவர்கள் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கும் இடத்திற்கு வருவதற்கு மிகுந்த தொலைவு உள்ளதாலும் இங்கு கல்வி பயில வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    நகரின் பல பகுதிகளிலும் குறைவான தொகை பெறும் தனியார் பள்ளிகளும் உள்ளதாலும் அதிக எண்ணிக்கையில் தனியார் பள்ளிகள் உள்ளதாலும் அரசுப் பள்ளியில் சேர மாணவ-மாணவிகளின் பெற்றோர் தயங்குவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் அரசுப் பள்ளியில் கல்வித் தரம் மிகவும் குறைந்துள்ள–தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இங்கு 6 முதல் 12ம் வகுப்பு வரைகல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 303 பேர் மட்டுமே உள்ளனர். மாணவர்கள் 254 பேரும் மாணவிகள் 49 பேரும் பள்ளியில் கல்வி பயின்று வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு கல்வி பயிற்றுக்கொடுக்க 12ஆசிரியைகளும், 7ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர் ஒருவரும் உள்ளனர்.இவ்வளவு ஆசிரியர்கள் இருந்தும் கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

    இந்த வருடம் 10ம் வகுப்பு தேர்வில் 63 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் 38 -பேர் இதில் மாணவர்கள் 20 பேர் மாணவிகள் 7 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதேபோல் 12ம் வகுப்புத் தேர்வில் 64 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 56 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.மாணவர்கள் 33 பேர், மாணவிகள் 3 தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்தி மாணவ மாணவிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதில் இங்குள்ள ஆசிரியர்களும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்ப–டுவதால் மாணவர் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. ஆனால் கொடைக்கானல் போன்ற மலை கிராமத்தில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது கல்வியாளர்களை வேதனையடைய வைத்துள்ளது.


    Next Story
    ×