search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் செம்மண்டலத்தில் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து  ஓடிய குடிநீர்
    X

    சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்.

    கடலூர் செம்மண்டலத்தில் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்

    இன்று காலை முதல் இந்த பகுதிக்கு சரியான முறையில் குடிநீர் வராமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்‌.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் மலைப்பகுதியில் இருந்து ராட்சத குழாய் மூலம் கடலூர் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வரவழைக்கப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் சேமித்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ப்பட்டு வருகின்றது. கடலூர் செம்மண்டலம் தீபன்நகர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தினந்தோறும் கடலூர் செம்மண்டலம், மஞ்சக்குப்பம் ஒரு பகுதி, வில்வ நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை செம்மண்டலம் நான்கு முனை சந்திப்பில் சாலைக்கு அடியில் இருந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் முழுவதும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த குடிநீரானது சாலையில் தற்போது குளம் போல் தேங்கி வீணாகி வருகின்றன.

    மேலும் இன்று காலை முதல் இந்த பகுதிக்கு சரியான முறையில் குடிநீர் வராமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இது மட்டும் இன்றி ஒரு சில இடங்களில் சென்ற குடிநீர் முழுவதும் கலங்கலாகவும் வந்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் சீர் செய்யும் நடவடிக்கையாக முதற்கட்டமாக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை என்பதால் அவர்களிடம் அனுமதி கேட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் அனுமதி அளித்த பின்பு பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் செல்லும் குழாய் சீரமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் மக்களுக்கு மிக அத்தியாவசியமான தேவையான குடிநீரை எந்தவித பாதிப்புகளும் இன்றி உடனடியாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×