search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், வணிகர்களுக்கான பயிற்சி பட்டறை- கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    தஞ்சையில் வணிகர்களுக்கான பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசினார்.

    தஞ்சையில், வணிகர்களுக்கான பயிற்சி பட்டறை- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிளாஸ்டிக் பயன்பாடு குறைவாகத்தான் இருந்தது.
    • பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், கவின்மிகு தஞ்சை இயக்கம் ஆகியவை சார்பில் இன்று நெகிழி தடுப்பு குறித்து வணிகர்களுக்கான பயிற்சி பட்டறையை நடத்தியது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். ஆணையர் சரவண–குமார் வகித்தார். மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் விஜயபிரியா, மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி ஆகியோர் வரவேற்று பேசினர்.

    இதில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது :-

    நெகிழி இல்லாத மாவட்டமாக தஞ்சாவூர் மாற வேண்டும். அதற்கு வணிகர்கள் பொதுமக்கள், அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. ஒரு தடிமனான பிளாஸ்டிக் மக்குவதற்கு 1000 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பிளா–ஸ்டிக்கை பயன்படுத்தும் போது அதில் மண்ணில் மக்காமல் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. மண் வளத்தை பாதிக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிளாஸ்டிக் பயன்பாடு குறைவாகத்தான் இருந்தது. தற்போது பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த சவாலாக உள்ளது. இருந்தாலும் அனைவரும் மனது வைத்தால் நிச்சயமாக கட்டுப்படுத்தி விடலாம். கடைகளுக்கு பொதுமக்கள் பொருட்கள் வாங்கும்போது துணிப்பை அல்லது மஞ்ச பைகளை கொண்டு செல்லுங்கள். வியாபாரிகளும் பொதுமக்களுக்கு பொருட்கள் கொடுக்கும் போது பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள். பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக தஞ்சாவூர் மாற வேண்டும்.

    பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் விதிப்பது எங்களது நோக்கமல்ல. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வேண்டும். இதற்கு வணிகர்கள், வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தஞ்சை மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    செந்தமிழ் வட்டாரத்தில் இருந்து மணிமண்டபம் வட்டார வரை ஆறு வழிச்சாலை வரப்போகிறது. தஞ்சை மாவட்டம் சுற்றுலா நிறைந்த மாவட்டமாகும். அதன்படி வளர்ச்சியை நோக்கியே பயணம் இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து ஆணையர் சரவணகுமார் பேசும்போது,

    கலெக்டர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். அவருக்கு படைத்தளபதியாக பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். பிளாஸ்டிக் பயன்பாட்டை அனைவரும் முற்றிலும் தடுக்க வேண்டும். விபத்தில்லா தஞ்சாவூர் மாநகரை உருவாக்க சாலைகள் அகலப்படுத்தபட்டு வருகின்றன. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டுப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது மறுமுறை ஹெல்மெட் அணிந்து செல்வதற்காக தான். அனைவரும் போக்கு வரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

    இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் திருச்சி பிஷப் கல்லூரி துணை முதல்வர் அழகப்பா மோசஸ், கவின்மிகு தஞ்சை இயக்கம் செயலாளர் பர்வீன் ஆகியோர் வணிகர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்தனர். பிளாஸ்டிக் மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி பட்டறையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×