என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் முக்குலத்து புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சையில், முக்குலத்து புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
- சோழன் சிலையை கோவில் உள்புறத்தில் வைக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி பெரும்பான்மைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், முக்குலத்தோர் சமுதாய மக்களை தேவரினமாக ஒரே பெயரில் இணைத்து அரசாணை வெளியிட வேண்டும் .
தஞ்சை பெருவுடையார் கோவில் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள மாமன்னர் ராஜ ராஜ சோழன் சிலையை கோவில் உட்புற வளாகத்தில் வைக்க வேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் தார் சாலை போடுவது உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் அமல்படுத்தக் கூடாது என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு முக்குலத்து புலிகள் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு. சரவணதேவர் தலைமை தாங்கி பேசியதாவது :-
4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். பெரிய கோவில் கட்டிய மாமன்னர் ராஜ ராஜ சோழன் சிலையை கோவில் உள்புறத்தில் வைக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். எங்களது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாநில தலைமை நிலைய செயலாளர் செந்தில் தேவர், தஞ்சை நகர செயலாளர் ராமு தேவர், இளைஞரணி செயலாளர் சக்தி, நாகை மாவட்ட செயலாளர் பைரவர் தேவர், தஞ்சை மாவட்ட பொருளாளர் ரவீந்திர தேவர், பட்டுக்கோட்டை நகர துணை செயலாளர் சண்முகம், பேராவூரணி ஒன்றிய செயலாளர் தமிழ் தேவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வடக்கு மாவட்ட செயலாளர் இளையராஜா தேவன் நன்றி கூறினார்.






