search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லணையில் இருந்து ஆறுகளில் முழு அளவில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
    X

    கல்லணையில் இருந்து ஆறுகளில் முழு அளவில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

    • இன்றைய காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 ஆயிரத்து 642 கனஅடியாக உள்ளது.
    • கால்வாய் தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு முறைப்பாசன ஏற்பாடு உகந்ததாக இல்லை.

    பூதலூர்:

    தஞ்சை வளநாட்டை வளமாக தொடர்ந்து வைத்திருக்கும் காவிரித்தாய் இந்த ஆண்டு பெருகி வந்து கொண்டிருக்கிறாள். கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் பெருகி வந்து மேட்டூர் அணையை நிரப்பிக் கொண்டுள்ளது.

    இன்றைய காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 ஆயிரத்து 642 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் 113.96 அடியாக உயர்ந்து உள்ளது.தொடர்ந்து நீர்வரத்து இதே நிலையில் தொடர்ந்தால் இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்கு இன்று காலை நிலவரப்படி 18,024 கன அடியாக திறந்து விடப்படுகிறது. கல்லணையில் இருந்து காவிரியில் 510 கனஅடியும், வெண்ணாற்றில் அதிகபட்ச அளவாக 8104 கன அடியும், கல்லணை கால்வாயில் நடப்பு ஆண்டில் இன்றைய தினத்தில் 2,219 கன அடியும், கொள்ளிடத்தில் 1,207 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    காவிரி பாசன பகுதிகளில் உள்ள கடைமடை பகுதிகளில் இன்னமும் தண்ணீர் சென்று சேராத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கல்லணையிலிருந்து 6 நாட்களுக்கு ஒரு முறை காவிரி மற்றும் வெண்ணாற்றில் மாறி மாறி தண்ணீர் திறந்து விடப்படுவது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கால்வாய் தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு முறைப்பாசன ஏற்பாடு உகந்ததாக இல்லை. முழு அளவில் நடவு முடியும் வரை அதிகளவில் தண்ணீர் விட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ஒரு பக்கம் தண்ணீர் பெருகி வந்து கொண்டிருந்தாலும் மறுபக்கத்தில் வறட்சியான நிலை எதார்த்தமான ஒன்று. கல்லணையின் தலைப்பு பகுதியாக உள்ள பூதலூர் ஒன்றியத்தின் செங்கிப்பட்டி பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஏரிகள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.செங்கிப்பட்டி பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய், உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் மூலம் தண்ணீர் பெற்று ஏரிகளை நிரப்பி அதன் மூலம் 10,000 ஏக்கர் ஒருபோக சாகுபடி நடைபெறும்.

    இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட போது, பரிசோதனை அடிப்படையில் செங்கிப்பட்டி பகுதி பாசனத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டு இருபோக சாகுபடி செய்ய வழிவகை செய்யப்படுமா ? என்று மாலை மலரில் செய்தி வெளியாகி இருந்தது.

    அதை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மற்றவர்களும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இன்னமும் காலம் கடத்தாமல் பூதலூர் ஒன்றியத்தின் செங்கிப்பட்டி பகுதி பாசனத்திற்கு உடனடியாக புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் களில்தண்ணீர் திறந்து ஏரிகளை நிரப்பி, ஒட்டுமொத்தமாக நாற்றங்கால் அமைத்து இந்த பகுதியில் இரு போக சாகுபடிக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேளாண் துறையும், நீர்வள ஆதார துறையும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது விவசாயத் துறை முன்னோடி்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×