search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொழி அறிவு, பொது அறிவு திறன் மேம்பட பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் நாளிதழ்களை வாசிப்பது அவசியம் - ஆறுமுகநேரி பள்ளி ஆண்டு விழாவில் உதவி கலெக்டர் பேச்சு
    X

    விழாவில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன் பேசிய போது எடுத்தபடம்.

    மொழி அறிவு, பொது அறிவு திறன் மேம்பட பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் நாளிதழ்களை வாசிப்பது அவசியம் - ஆறுமுகநேரி பள்ளி ஆண்டு விழாவில் உதவி கலெக்டர் பேச்சு

    • தொழிலதிபர் ஜானகிராமன் மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
    • மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே தங்களுக்கான லட்சியத்தை மனதில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று உதவி கலெக்டர் குருச்சந்திரன் பேசினார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி கா.ஆ. மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் கல்வி சங்க தலைவர் முகமது அப்துல்காதர் தலைமை தாங்கினார். பொருளாளர் பாஸ்கரன், துணைத் தலைவர்கள் கணேசன், பசீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் வரவேற்று பேசினார்.

    ரூ. 500 கோடி

    தொழிலதிபர் ஜானகிராமன் மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் தமிழ் வழியில் கற்றாலும் ஆங்கில வழியில் கற்றாலும் அவர்களுக்கு எழுத்து திறமையில் இன்னும் மேம்பட வேண்டிய நிலையில் உள்ளனர். பொதுவாக கல்லூரியில் மேற்படிப்பை முடித்த பின்னர் போட்டித் தேர்வுக்கான முனைப்பில் ஈடுபடுவது வழக்கத்தில் உள்ளது. இதற்கான பயிற்சி நிறுவனங்களின் மூலம் ஆண்டிற்கு ரூ. 500 கோடிக்கு மேல் புழங்கி வருகிறது.

    வாசிப்பு திறன்

    இப்படியான நிறுவனங்களும் மாணவர்க ளை 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடங்களையே மீண்டும் கற்க வைக்கின்றனர். அப்போது பழைய புத்தகங்களை தேடி மாணவர்கள் அலைய நேரிடுகிறது. இதனை தவிர்க்க தொடக்க காலத்தில் இருந்தே பள்ளி மாணவ- மாணவிகள் உரிய படங்களை கவனமாக கற்றுக் கொள்ள வேண்டும்.

    பாடப் புத்தகங்களை மட்டுமின்றி நல்ல கதை புத்தகங்கள் மற்றும் பொது அறிவு புத்தகங்களையும் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்களை கண்டிப்பாக தினசரி படிக்க வேண்டும். இதன்மூலம் வாசிப்பு திறன் மேம்பட்டு மொழி அறிவும் பொது அறிவு இயல்பாகவே கிடைத்துவிடும்.

    மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே தங்களுக்கான லட்சியத்தை மனதில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும். கலெக்டர், டாக்டர் போன்ற பதவிகள் மட்டுமின்றி அரசு துறையில் உதவி கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு போன்ற வரிசைகளிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசின் வேலைகளில் தமிழர்கள் குறைந்த அளவிலேயே உள்ளனர். இந்த நிலையை மாற்றும் வகையில் நீங்கள் தரமான கல்வியை கடினமான முயற்சியால் பெற்று வளர்ச்சியை எட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பள்ளியின் கல்வி குழு நிர்வாக உறுப்பினர்கள் அமிர்தராஜ், ராமசாமி, சண்முக கனி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×