search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனிப்பொழிவால் முல்லைப்பூ விளைச்சல் பாதிப்பு
    X

    பனிப்பொழிவால் முல்லைப்பூ விளைச்சல் பாதிப்பு

    • பருவநிலை மாறுபாடு காரணமாக திடீரென பனிப்பொழிவு காணப்படுகிறது.
    • சில நேரங்களில் பூவை பறிக்காமலேயே விட்டு விடுகிறோம்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், நெய்விளக்கு, பஞ்சநதிக்குளம் உள்ளிட்ட 20 கிராமங்களில் 4 ஆயிரம் ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது.

    இந்த பகுதியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை முல்லைப்பூ சீசன் காலமாகும்.

    இந்த சீசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் முல்லைப்பூக்கள் விளையும்.

    இங்கிருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு முல்லைப்பூ விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    தற்போது வேதாரண்யம் பகுதியில் பருவநிலை மாறுபாடு காரணமாக திடீரென பனிப்பொழிவு காணப்படுகிறது.

    இதனால் முல்லைப்பூ செடிகளின் இலைகள் உதிர்ந்து பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

    நாள் ஒன்றுக்கு 1 டன் முதல் 2 டன் வரை மட்டுமே வெளியூர்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சீசன் காலத்தில் முல்லைப்பூ கிலோ ரூ.50-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. சீசன் இல்லாத நவம்பர் முதல் பிப்ரவரி வரை கிலோ ரூ.1000 வரை விற்பனை ஆகிறது.

    தற்போது கிலோ ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனையாகிறது. பனிப்பொழிவால் முல்லைப்பூ அதிகம் விளையாததால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

    விளைச்சல் அதிகமான காலங்களில் பூ பறிப்பதற்கான கூலிக்கு கூட கட்டுப்படியாகாத விலை கிடைக்கிறது.

    இதனால் சில நேரங்களில் பூவை பறிக்காமலேயே விட்டு விடுகிறோம்.

    இந்த நிலையில் தற்போது எதிர்பாராத வேளையில் பனிப்பொழிவு ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    Next Story
    ×