search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2.04 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு
    X

    கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2.04 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு

    • கடந்த மாதம் 28-ந் தேதி வரை 2 லட்சத்து 4 ஆயிரத்து 423 நபர்கள் பதிவு செய்துள்ளனர்.
    • பதிவு செய்ய இயலாதவர்கள் வருகிற 15, 16-ந் தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை வருகிற செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்து, அதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்யும் முகாமை கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் தொடங்கி வைத்தார்.

    அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் ஒவ்வொரு நியாய விலைக்கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம், டோக்கன் ஆகியவை நியாய விலைக்கடை பணியாளர்கள் மூலம் வீட்டில் நேரடியாக வழங்கப்பட்டது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் 1094 நியாய விலைக் கடைகளில் உள்ள 5 லட்சத்து 64 ஆயிரத்து 264 குடும்ப அட்டைதாரர்கள் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக 584 கடைகளில் உள்ள 2 லட்சத்து 98 ஆயிரத்து 164 நபர்களுக்கு (முதல் நாள் ஒவ்வொரு பதிவு மையத்திலும் 60 நபர்களும், இரண்டாவது நாள் முதல் 80 நபர்கள் வீதம்) தேதி குறிப்பிட்டு விண்ணப்பங்கள் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டு 2 லட்சத்து 74 ஆயிரத்து 853 நபர்களுக்கு ஒப்புதல் ரசீது மற்றும் விண்ணப்பம் வழங்கப்பட்டு, 823 விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்கள் மூலம் கடந்த மாதம் 28-ந் தேதி வரை 2 லட்சத்து 4 ஆயிரத்து 423 நபர்கள் பதிவு செய்துள்ளனர்.

    மேலும், கடந்த மாதம் 24-ந் தேதி முதல் நேற்று வரை டோக்கன் வழங்கப்பட்ட போது வீடு பூட்டி இருப்பதாலும், வெளியூர் சென்றுவிட்டதாலும் ஒப்புதல் ரசீது மற்றும் விண்ணப்பங்கள் பெறாத 23 ஆயிரத்து 311 நபர்களுக்கு மீண்டும் டோக்கன் வழங்கப்படும்.

    மேற்கண்ட உரிய தேதிகளில் பதிவு செய்ய இயலாதவர்கள் மற்றும் விண்ணப்பம் பெறாதவர்கள் அனைவரும் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய இரு நாட்கள் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், இரண்டாம் கட்டமாக மீதம் உள்ள 510 நியாய விலைக் கடைகளில் உள்ள 2 லட்சத்து 66 ஆயிரத்து 460 குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) வரை டோக்கன் வழங்கப்பட்டு, 774 விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்கள் மூலம் வருகிற 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை விண்ணப்பதிவு செய்ய திட்டமிட ப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் கட்டத்தில் உரிய தேதிகளில் பதிவு செய்ய இயலாதவர்கள் வருகிற 15-ந் தேதி மற்றும் 16-ந் தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்தார்.

    Next Story
    ×