search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிய சாம்பியன் ஆக்கி போட்டி 3-ந்தேதி தொடக்கம்
    X

    ஆசிய சாம்பியன் ஆக்கி போட்டி 3-ந்தேதி தொடக்கம்

    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வெற்றி கோப்பை பயணம்
    • கன்னியாகுமரியில் இன்று தொடங்கியது

    கன்னியாகுமரி :

    ஆண்களுக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி போட்டி சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி மைதானத்தில் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது. 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய 6 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி வெற்றி கோப்பையை கன்னியா குமரியில் இருந்து சென்னை வரை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து வெற்றி கோப்பையை சென்னையில் கடந்த 20-ந்தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் வெற்றி கோப்பை பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று காலை நடந்தது.

    விழாவின் தொடக்கமாக ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் வெற்றி கோப்பையை ரெமோ மனோ தங்கராஜ் முன்னிலையில் மாவட்ட ஆக்கி விளையாட்டு கழக செயலாளர் டிக்சன் தலைமையில் விளையாட்டு வீரர்கள் விழா மேடைக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் அந்த வெற்றி கோப்பையை அவர்கள் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் வழங்கினார்கள். குமரி மாவட்ட ஆக்கி விளையாட்டு கழக தலைவர் டாக்டர் டங்ஸ்டன் சென்னையில் நடைபெறும் ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி பற்றி அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் வெற்றி கோப்பை பயணத்தை தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து ஆசிய ஆக்கி போட்டிக்கான குறியீட்டு சின்னம் வெளியிடப்பட்டது. பின்னர் கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உள்பட பலர் ஆக்கி மட்டையை கையில் தாங்கி பந்தை அடித்து விளையாடிய காட்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆக்கி விளையாட்டு வீரர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன், உதவி கலெக்டர் குணால் யாதவ், கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமார், மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ்குமார், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அதன் பிறகு இந்த ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் வெற்றி கோப்பையை ஆக்கி விளையாட்டு வீரர்கள் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இதற்காக தனியாக வடிவமைக்கப்பட்ட பஸ்சில் பயணமாக எடுத்துச்சென்றனர்.

    கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த வெற்றிக்கோப்பை பயணம் நெல்லை, விருதுநகர், மதுரை உள்பட 34 மாவட்டங்கள் வழியாக வருகிற 30-ந்தேதி சென்னை கொண்டு செல்லப்படுகிறது.

    Next Story
    ×