search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்ட ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்ட ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை

    • அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பேட்டி
    • 490 கோவில்களுக்கும் அவர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு சுசீந்திரம் திருக்கோயில்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்கள் மற்றும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள கோவில்கள் என 490 கோவில்களுக்கும் அவர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    அங்கு செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், சென்னையில் அமைச்சர் சேகர் பாபுவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது குமரி மாவட்டத்தில் திருக்கோயிலுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து அவர் எடுத்துக் கூறினார். மேலும் ஆயுதபூஜையை யொட்டி பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்படும் உடைவாள் மாற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

    இதையடுத்து அமைச்சர் சேகர் பாபு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவதாக உறுதி அளித்தார். தொடர்ந்து 490 கோவில்களில் ஆய்வு செய்த போட்டோக்களை பிரபா ராமகிருஷ்ணன், அமைச்சர் சேகர்பாபுவிடம் காண்பித்தார். அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள் 490 கோவில்களை ஆய்வு செய்த பிரபா ராமகிருஷ்ணனை அமைச்சர் சேகர் பாபு பாராட்டினார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, ஜோதிஷ்குமார், துளசிதரன் ஆகியோரும் உடன் இருந்தனர். தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரையும் அறங்காவல் குழு சந்தித்தது.

    இது குறித்து அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் திருக்கோவில்கள் கட்டுப்பாட்டில் உள்ள 490 கோவில்களையும் நேரடியாக சென்று ஆய்வு செய்தேன். கோவில்களில் பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அவரும் ஒரு மாத காலத்திற்குள் அதற்கான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் சில கோவில்களை புரணமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன்.அதற்கான நடவடிக்கை எடுக்கப்ப டுவதாக உறுதி அளித்தார். குமரி மாவட்டத்தில் அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×