search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடத்தி சென்றபோது விபத்தில் சிக்கி பலி
    X

    கடத்தி சென்றபோது விபத்தில் சிக்கி பலி

    • பிளஸ்-2 மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற வாலிபர் போதையில் இருந்தாரா?
    • இன்ஸ்டா காதல் மூலம் பழகிய மாணவி விபத்தில் பலியான சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கன்னியாகுமரி :

    சமூக வலைதளங்கள் பல்வேறு நன்மைகளை அளித்தாலும் சில விரும்பதகாத செயல்களுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் குமரி மாவட்டத்தில் நடைபெற்று பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் மாணவியை மயக்கிய வாலிபர் அவரை கடத்திச் சென்றபோது, விபத்தில் சிக்கி உள்ளார். இதில் மாணவி பலியான சம்பவம் தான் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள தருவையைச் சேர்ந்தவர் லாசர்மணி. இவர் இறந்து விட்ட நிலையில் மகள் அபர்ணா (வயது 16) தனது தாய் மற்றும் சகோதரியுடன் உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார். பிளஸ்-2 தேர்வு எழுதிய இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குளச்சல் களிமார் பகுதியைச் சேர்ந்த விஜூ (19) இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானார்.

    இது பற்றி தெரியவந்ததும் அபர்ணாவை அவரது தாயார் தமிழரசி கண்டித்துள்ளார். மேலும் விஜூவையும் அவர் எச்சரித்துள்ளார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக அபர்ணாவை சந்திக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அபர்ணா வீட்டில் தனியாக இருந்ததை தெரிந்த விஜூ, மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளார்.

    மாணவி அபர்ணாவை சந்தித்த அவர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். பின்னர் அவர் அபர்ணாவை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றுள்ளார். மண்டைக்காடு அருகேஉள்ள வெட்டு மடை பகுதியில் சென்ற போது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையில் அபர்ணா மாயமானது குறித்து, அவரது தாயார் போலீசில் புகார் கொடுத்தார். அப்போது தான் மகள் கடத்தப்பட்டதும், விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் இருப்பதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். தொடர்ந்து மகள் அபர்ணாவை, ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபர்ணா பரிதாபமாக இறந்தார். இன்ஸ்டா காதல் மூலம் பழகிய மாணவி விபத்தில் பலியான சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதற்கிடையில் அபர்ணாவை கடத்திச் சென்ற விஜூ, போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்ட பிறகு தலையில் காயம் அடைந்த அபர்ணாவை சாலையில் அப்படியே விட்டுவிட்டு விஜூ சென்று விட்டதாகவும், பின்னர் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. விஜூ, மோட்டார் சைக்கிளில் செல்லும் போது போதையில் இருந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×