என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சலில் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்
    X

    குளச்சலில் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்

    • 3 சிற்றாலயங்களும் பூட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படவில்லை.
    • மாலை 3 மணியளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காணிக்கை அன்னை ஆலய வளாகத்தில் நடக்கிறது

    கன்னியாகுமரி :

    குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயம் 423 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் கோட்டார் மறை மாவட்டத்தால் உருவாக்கப்பட்ட அன்பியங்கள் இல்லை என்ற காரணத்தால் கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி முதல் தினசரி திருப்பலி, நினைவு திருப்பலி, ஒப்புரவு அருட்சாதனம், முதல் திருவிருந்து, மந்திரிப்புகள், தவக்காலத்தில் குருக்களால் நடத்தப்படும் சிலு வைப்பாதை ஆகியவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. காணிக்கை அன்னை ஆலய பங்கு நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 3 சிற்றாலயங்களும் பூட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படவில்லை.

    இந்த தடைகளை நீக்கி ஆலய வழிபாடுகளை தொடர்ந்து நடத்திட வலியுறுத்தி குளச்சல் பங்கு மக்கள் மற்றும் கோட்டார் மறை மாவட்ட கடற்கரை பங்குகளின் கூட்டமைப்பு குழு சார்பில் இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணியளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காணிக்கை அன்னை ஆலய வளாகத்தில் நடக்கிறது. மீனவர்கள் இன்று காலை அடையாள வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

    வேலை நிறுத்தத்தை முன்னிட்டு இன்று காலை முதலே வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் இன்று குளச்சல் மீன் ஏலக்கூடம் வெறி ச்சோடி காணப்பட்டது. மீன் வாங்க வந்த பொதுமக்களும், வியாபாரிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஏற்கனவே மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடந்த 1-ந்தேதி முதல் 60 நாட்கள் தடை அமலில் இருந்து வருகிறது. வள்ளம், கட்டுமரங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் குளச்சலில் இன்று மீன் வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலய பங்கு மக்கள் அறிவித்த ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தம் தொடர்பாக கோட்டார் பிஷப் ஹவுசில் நேற்றிரவு வரை பேச்சுவார்த்தை நடந்தது. இதில் குளச்சல் பங்கு நிர்வாக குழுவினர் மற்றும் ஆதரவு ஆலய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதனால் இன்று 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    Next Story
    ×