search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரையுமன்துறை தூண்டில் வளைவு பணியை உடனே தொடங்க வேண்டும்
    X

    இரையுமன்துறை தூண்டில் வளைவு பணியை உடனே தொடங்க வேண்டும்

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • முதல் இரண்டு கட்டங்களாக முறையே ரூ.60 கோடி, ரூ.77 கோடி என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை, கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் கட்டமைப்பு முறையாக அமைக்கப்படாததால் ஏற்பட்ட மணல் திட்டுக்களாலும் கடல் அலை சீற்றத்தினாலும் துறைமுக வாயிலில் பல மீனவர்கள் உயிரிழந்தனர்.

    இதன் காரணமாக நான் பல முறை சட்டமன்றத்திலும், தமிழ்நாடு முதல்-அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் முதல் இரண்டு கட்டங்களாக முறையே ரூ.60 கோடி, ரூ.77 கோடி என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

    இதனால் விஜய்வசந்த் எம்.பி. கோட்டார் மறை மாவட்ட ஆயர். நசரேன் சூசை, தூத்தூர் மண்டலம் பெபின்சன், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழுமம் இயக்குனர் டனிஸ்டன், கோட்டாறு மறைமாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன், கிளீட்டஸ், அம்புறோஸ் ஆகியோரும் தமிழ்நாடு முதல்-அமைச்சரை சந்தித்து தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக மறு கட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்தவும், இரையு மன்துறை கிராமத்தை பாதுகாக்கவும் கோரிக்கை வைத்தோம்.

    தொடர் முயற்சியின் காரணமாக தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக மறுகட்டமைப்பு பணிகளுக்கு 3-ம் கட்டமாக ரூ.116 கோடிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு மொத்தம் ரூ.253 கோடிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு மீன்பிடி துறைமுக மறு கட்டமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.அப்போதிலிருந்தே இரையுமன்துறை கிராமத்தை பாதுகாப்பதற்காக தூண்டில் வழைவுகள் அமைக்கவும் கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

    ஒரு பக்கம் கடல் சீற்றமும் அடுத்த பக்கம் தாமிரபரணி ஆறு -ம் உள்ளதால் இயற்கை சீற்றத்தின்போது இரையுமன்துறை கிராமம் ஒட்டுமொத்தமாக அழியும் தருவாயில் உள்ளதால், அழிவிலிருந்து பாதுகாக்க வரும் ஜூன் மாத பருவகால சீற்றத்திற்கு முன் இரையுமன்துறை மீன் இறங்குதள பணியில் உள்ள தூண்டில் வளைவு பணியை உடனடியாக தொடங்கி முடித்து தரும்படியும், இந்த நிதியாண்டின் மீன்வளத்துறை மானிய கோரிக்கை நிதி நிலையில் ரூ.40 கோடி நபார்டு நிதியில் அறிவிக்கவும் கோரிக்கை வைத்தேன். ஆலோசித்து இது குறித்து முதல்-அமைச்சர் எனது கோரிக்கையை ஏற்று கொண்டார். அதன் அடிப்படையில் வருகிற 5-ந்தேதி அன்று நடைபெறும் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிடப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறிஉள்ளார்.

    Next Story
    ×