search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் மந்தம்
    X

    குமரியில் சிப்பி மீன் எடுக்கும் மீனவர்கள்

    குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் மந்தம்

    • குளச்சல், கடியபட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இனயம், மேல்மிடாலம் ஆகிய கடலோர கிராமங்களில் மீனவர்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நவம்பர் மாதம் தொடங்கியும், குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் தொடங்கவில்லை.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.இதன் மூலம் கணவாய், இறால், கேரை, சுறா, நெய் மீன், சூரை மற்றும் நெத்திலி, சாளை, வெளமீன் போன்ற மீன்கள் பிடிக்கப்படுகின்றன.

    இந்த மீன் வகைகள் தவிர ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தோடு எனப்படும் 'சிப்பி'மீன்கள் பிடிக்கப்படுகிறது. முத்து குளிக்கும் மற்றும் மூச்சு பயிற்சி பெற்ற மீனவர்கள் கடல் பாறை பகுதிகளில் நீருக்கு அடியில் சென்று பாறையில் ஒட்டியிருக்கும் சிப்பி மீன்களை எடுத்து வருவர்.

    குமரி மாவட்டத்தில் குளச்சல், கடியபட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இனயம், மேல்மிடாலம் ஆகிய கடலோர கிராமங்களில் மீனவர்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நவம்பர் மாதம் தொடங்கியும், குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் தொடங்கவில்லை.

    இதனால் இப்பகுதியில் சிப்பி மீன் எடுக்கும் மீனவர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர். கடந்த 2 நாட்களாக குளச்சல் அருகே கோடிமுனை கிராமத்தில் ஒரு சில மீனவர்கள் சிப்பி மீன் எடுத்து வருகின்றனர்.

    இவர்களுக்கு சிப்பி மீன் குறைவாகவே கிடைத்தது.நேற்று கரைக்கு எடுத்து வரப்பட்ட சிப்பி மீன்களை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர். 100 சிப்பி மீன் ரூ.1000-க்கு விலை போனது. கடந்த 3 வருடமாக சிப்பி மீன் குறைவாக கிடைப்பதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

    இந்த வருடமும் சிப்பி மீன் சீசன் மீனவர்களுக்கு கை கொடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.தற்போது கோடிமுனை, இனயம் கிராமங்களில் மட்டும் சிப்பி எடுக்கும் தொழில் நடக்கிறது. பிற கிராமங்களில் சிப்பி எடுக்கும் தொழிலை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

    இதனால் குமரி மாவட்டத்தில் சிப்பி எடுக்கும் தொழில் மந்தமாக உள்ளது. இந்த சிப்பி மீன்களுக்கு கேரளா ஓட்டல் மற்றும் மதுபான பார்களில் பெரும் மவுசு உள்ளதால் கேரள வியாபாரிகள் வந்து வாங்கி செல்வர். ஆனால் இந்த வருடம் சிப்பி மீன் எடுக்கும் தொழில் மந்தமாகி உள்ளதால் கேரள வியாபாரிகள் குமரி மாவட்டத்திற்கு வரவில்லை. சிப்பி எடுக்கும் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    Next Story
    ×