search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகர பகுதியில் பொதுமக்களின் குறைகளை தெரிவிக்க கியூ.ஆர். கோடு செயலி
    X

    நாகர்கோவில் மாநகர பகுதியில் பொதுமக்களின் குறைகளை தெரிவிக்க கியூ.ஆர். கோடு செயலி

    • மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • சொத்து வரி, மின்இணைப்பு , தண்ணீர் வரி உள்பட அனைத்து தகவல்களும் இடம் பெற்று இருக்கும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சியின் சேவைகளை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே பயன்படுத்திக் கொள்ள வசதியாக கியூ.ஆர்.கோடு செயலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் மாநகராட்சி 4-வது வார்டுக் குட்பட்ட கோட்டவிளை காமராஜர் படிப்பகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு கியூ.ஆர்.கோடு செயலியை தொடங்கி வைத்தார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மாநகராட்சி சார்பில் கியூ.ஆர்.கோடு அட்டை வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை வீட்டிலிருந்து தெரிவிக்கும் வகையில் கியூ.ஆர்.கோடு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் வீட்டின் உரிமையாளர் பெயர் ரேஷன் கார்டில் உள்ள தகவல்கள், சொத்து வரி, மின்இணைப்பு தகவல்கள், தண்ணீர் வரி தகவல்கள் உள்பட அனைத்து தகவல்களும் இடம் பெற்று இருக்கும். பொதுமக்கள் தங்களது புகார்களையும் இந்த கியூ.ஆர்.கோடு செயலி மூலமாக மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம். மின் இணைப்பு, தண்ணீர் கட்டணத்தையும் இதன் மூலமாக செலுத்தி கொள்ளலாம். எனவே பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

    முதல் கட்டமாக 4-வது வார்டுக்குட்பட்ட கோவில்விளை பகுதியில் தொடங்கப்பட்டுள்ள கியூ.ஆர்.கோடு செயலி நாகர்கோவில் மாநகராட்சி முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். மாநகராட்சி ஊழியர்கள் அதற்கான பணியை மேற்கொண்டு வருகிறார் கள்.

    52 வார்டுகளுக்கும் மாநகராட்சி ஊழியர்கள் சென்று இந்த பணியை மேற்கொண்டு உள்ளனர். ஒரு வீட்டில் கியூ.ஆர்.கோடு செயலியை அறிமுகப்படுத்த 20 நிமிடங்கள் ஆகிறது.

    மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கியூ.ஆர்.கோடு செயலி ஒரு மாதத்தில் செயல்படுத்தப்படும். சுமார் 1 லட்சம் வீடுகளுக்கு கியூ.ஆர்.கோடு செயலி அறிமுகப் படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் தென்மண்டல ஓ.பி.சி. பிரிவு தலைவர் ஜெயச்சந்தி ரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×