search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு ரூ.30 லட்சம் மதிப்பில்  தற்காலிக மணல் உறிஞ்சும் எந்திரம்
    X

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு ரூ.30 லட்சம் மதிப்பில் தற்காலிக மணல் உறிஞ்சும் எந்திரம்

    • கடந்த நான்காண்டுகளில் மட்டும் சுமார் 23 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
    • அதிகாரிகள் கண் துடைப்பிற்காக சாதாரண இயந்திரத்தை கொண்டு வந்துள்ளனர் என குற்றம் சாட்டினார்கள்.

    கன்னியாகுமரி:

    தேங்காப்பட்டணம் மீன் பிடித்துறைமுகத்தில் தூத்தூர், இனயம் மண்ட லத்தை சேர்ந்த மீனவர்கள் 850 விசைப்படகுகள், ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட வள்ளங்கள் மூலம் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் மீன்பிடித் துறைமுகம் சரியான முறையில் கட்டமைப்பு செய்யவில்லை என்ற புகார் உள்ளது. காரணம் வருடத்தில் இரண்டுமுறை ஏற்படும் கடல் சீற்றத்தால் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் மணல் குவியல்கள் ஏற்படுவதால், மீனவர்களின் படகுகள் முகத்துவார பகுதியில் எழும்பும் கடலலையில் சிக்கி படகுகளும், வள்ளங்களும் கவிழ்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனால் கடந்த நான்காண்டுகளில் மட்டும் சுமார் 23 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆதலால் இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை மறுக்கட்டமைப்புடன் சீர் செய்ய வேண்டும் என தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சைமன் என்பவர் சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து மீனவர்கள் துறைமுக முகத்துவாரத்தில் மண் அள்ளும் பணியை உடனே துவங்க வேண்டும் என வலியுறுத்தி, முகத்து வாரத்தில் மண் அள்ளும் பணி துவங்கும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மாட்டோம் என சொல்லி நுழைவாயில் பகுதியில் கறுப்பு கொடி கட்டி அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மீன்பிடி துறைமுகத்தை சுற்றியுள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மீன் வியாபாரிகள் மீன் வாங்குவதற்கும், மீன் விற்பதற்கும் வரவில்லை.

    இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் 30 லட்சம் மதிப்பில் மணல் உறிஞ்சும் தற்காலிக இயந்திரம் நேற்று தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகம் வந்தடைந்தது. கேரளா மாநிலம் ஆலுவா பகுதியில் இருந்து அவசர தேவைக்காக இந்த இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ள தாக தெரிகிறது. உடனே இயந்திரத்தை பொருத்தும் பணியும் துவக்கபட்டது. எந்திரம் முழுவதும் பொருத்தி முடிந்த உடன் இரண்டு தினங்களில் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் உள்ள மணல் திட்டுகள் உறிஞ்சி அகற்றும் பனி துவங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

    ஆனால் இந்த தற்காலிக மணல் அள்ளும் எந்திரம் கொண்டு வந்தது மீனவர்களை ஏமாற்றும் செயல் என மீனவர்களில் ஒரு தரப்பினர் பரபரப்பு குற்ற சாட்டுகளை முன்வைத்துள்ளனர். காரணம் மணல் உறிஞ்ச ட்ரெட்ஜ்ஜர் என கூறப்படும் இயந்திரம் தான் பயன்படுத்துவது வழக்கம். இது நாகப்பட்டினத்தில் இருந்து கடல் வழியாக கொண்டு வரப்படும். ஆனால் அதிகாரிகள் கண் துடைப்பிற்காக சாதாரண இயந்திரத்தை கொண்டு வந்துள்ளனர் என குற்றம் சாட்டினார்கள். மட்டுமின்றி, ட்ரெட்ஜ்ஜர் எந்திரத்தை கொண்டு வராவிட்டால் வரும் செவ்வாய் முதல் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    அதேநேரம் குமரி மாவட்ட மீனவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரடி கென்னடி கூறியதாவது:-

    அரசுக்கு எதிராக ஒருசிலர் இந்த பிரச்சனையை தூண்டி விடுகின்றனர். அதிகாரிகள் அறிவித்த படி விரைவான நடவடிக்கைகள் நடந்து வருகிறது. அதையும் மீறி போராட்டம் நடத்துவது மீனவர்களை பாதிக்கும் செயல். துறைமுக கட்டுமான பணிகளிலும் முடக்கம் ஏற்படும் சூழல் உள்ளது. இந்த போராட்டத்துக்கு பெரும்பான்மை மீனவர் கள் எதிர்க்கின்றனர். குறிப்பாக மீன்பிடித் துறைமுக வியாபாரிகள், ஏலக்காரர்கள், தொழிலா ளர்கள் ஆதரவு இல்லை என கூறினார்.

    அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது அவர்கள் கூறியதாவது.-

    11-ந்தேதி பூந்துறை மீனவர் இறப்பினை தொடர்ந்து நடந்த போராட்டத்தின் விளைவாக மாவட்ட நிர்வாகம் அளித்த வாக்குறு தியின் படி, அலை தடுப்பு சுவர் பணிகள் அடுத்த தினம் துவங்கப்பட்டது., மணல் அள்ளுவதற்காக குமரி மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் மீன்பிடி துறைமுக மேலாண்மை சங்கத்தில் இருந்து 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ப்பட்டு தற்காலிக மணல் அள்ளும் எந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே நேரம் ட்ரெஜ்ஜர் எந்திரம் கொண்டு வர வேண்டும் என்றால் நாகபட்டணத்தில் இருந்து கொண்டு வர வேண்டும், அதற்கு அரசின் உத்தரவு மற்றும் அரசு நிதி குறைந்த அளவு 2 கோடி ஒதுக்க வேண்டும்.

    அரசு உத்தரவு பிறப்பித்து நிதி ஒதுக்கீடு செய்து, அது தேங்காப்பட்டணம் வந்து சேர வேண்டும் என்றால் 3 மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம். அதனால்தான் இந்த தற்காலிக ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மேலும் ட்ரெஜ்ஜர் இயந்திரம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சியர் மூலம் விரைந்து நடந்து வருகிறது. மட்டுமின்றி துறைமுக பனி முடியும் போது நிரந்தர ட்ரெஜ்ஜர் எந்திரம் அமைக்க படும் என கூறினார்கள்.

    Next Story
    ×