என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சுசீந்திரம் கோவிலில் பிரதோசத்தையொட்டி நடந்த சாமி ஊர்வலத்தில் வாகனம் சரிந்ததால் பரபரப்பு சுசீந்திரம் கோவிலில் பிரதோசத்தையொட்டி நடந்த சாமி ஊர்வலத்தில் வாகனம் சரிந்ததால் பரபரப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/07/02/1908269-8.webp)
சுசீந்திரம் கோவிலில் பிரதோசத்தையொட்டி நடந்த சாமி ஊர்வலத்தில் வாகனம் சரிந்ததால் பரபரப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள பக்தர்கள் குடும்பத்தோடு வந்திருந்தனர்
- சப்பரத்தை தூக்கி வந்த அறநிலைய துறை ஊழியர்கள் 4 பேரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலையன் சாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.
வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் தரிசனத்திற்கு வந்து செல்கிறார்கள். கோவிலில் பிரதோஷ தினத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள். குறிப்பாக சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆனி மாதம் சனிக்கிழமையான நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள பக்தர்கள் குடும்பத்தோடு வந்திருந்தனர். பெண்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது.
பிரதோஷ வழிபாடுகள் முடிவடைந்ததும் சுவாமி, வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுவாமி வாகனம் கோவிலை சுற்றி 3 முறை கொண்டு வரப்படுவது வழக்கம். அதன்படி கோவிலை சுற்றி சுவாமி வாகனத்தை எடுத்து வந்தனர். 2-வது சுற்று வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சுவாமி வாகனம் கவிழ்ந்தது. அதில் இருந்த விக்கிரகங்களும் சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து அர்ச்சகர்கள் உடனடியாக சுவாமி சப்பரத்தை சரி செய்து மீண்டும் 3-வது சுற்றாக கோவிலை சுற்றி கொண்டு வந்தனர். சுவாமி வீதி உலாவின்போது சப்பரம் கவிழ்ந்து விக்கிரகங்கள் கீழே விழுந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் ஏதோ அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். சப்பரத்தை தூக்கி வந்த அறநிலைய துறை ஊழியர்கள் 4 பேரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இணை ஆணையர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.