என் மலர்
உள்ளூர் செய்திகள்
தற்காலிக பஸ் நிலையத்தை புறக்கணித்த அரசு பஸ்கள்
- மேலூர் தற்காலிக பஸ் நிலையத்தை அரசு பஸ்கள் புறக்கணித்தன.
- செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலூர்
தமிழகம் முழுவதும் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் உள்ள பழைய பஸ் நிலையங்களை இடித்துவிட்டு நவீன முறையில் புதிய பஸ் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன்படி மதுரை மாவட்டத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் மேலூரில் உள்ள பழைய பஸ் நிலையத்தை இடித்து ரூ. 7.42 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையொட்டி பழைய பஸ் நிலையத்தில் இருந்த கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் முடிவுற்ற நிலையில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.கட்டுமான பணிகள் நடந்து முடியும் வரை மேலூர் பகுதியில் 4 இடங்களில் அரசு பஸ்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 4 இடங்களில் பஸ்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு வீண் அலைச்சலும் சிரமமும் ஏற்படும் என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின் தலைமையில் பொதுமக்கள், காவல்துறையினர், போக்கு வரத்து அதிகாரிகள் பங்கேற்ற கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
இதில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் முடியும் வரை மேலூர்- அழகர் கோவில் ரோட்டில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சிவன் கோவில் காலி இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.இந்த தற்காலிக பஸ் நிலையம் நேற்று (17-ந் தேதி) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சிவன் கோவில் திடலில் முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்காலிக பஸ் நிலையத்தில் எந்த ஒரு அரசு பஸ்களும் வந்து செல்லவில்லை. மாறாக மேலூர் நகர் பகுதியில் உள்ள மெயின் ரோட்டிலேயே ஆங்காங்கே பயணிகளை ஏற்றி இறக்கி அரசு பஸ்கள் சென்றன.
தற்காலிக பஸ் நிலையம் செயல்படும் என நம்பி அங்கு வந்த பொதுமக்கள் பஸ்கள் ஏதும் வராததால் மிகுந்த ஏமாற்றத்துடன் மீண்டும் பழைய பஸ் நிலைய பகுதிக்கு சென்று அரசு பஸ்களில் ஏறி பயணம் செய்தனர்.
நேற்று இரவு வரை எந்த ஒரு அரசு பஸ்சும் தற்காலிக பஸ் நிலையத்திற்குள் வரவில்லை. இதனால் சிவன் கோவில் திடல் வெறிச்சோடி காணப்பட்டது. மாறாக தனியார் வாகனங்கள் சில அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. நகர் மன்ற தலைவர், போலீசார் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பேசி தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அரசு பஸ்கள் வழக்கம்போல் நகர் பகுதியில் நின்று சென்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிக பஸ் நிலையம் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.