search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிப்பு
    X

    கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிப்பு

    • கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்/ கொத்தடிமை தொழிலாளர்) ஒருங்கிணைப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் பிப்ரவரி 9-ந் தேதி அன்று அனுசரிக்க அரசாணை வெளியிடப்பட்டது.இதையடுத்து சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படி மதுரை மாவட்டத்தில் கலெக்ட்ர் அனீஷ்சேகர் தலைமையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி தீபா, தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன், துணை ஆணையர் லிங்கம்,, உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) மலர்விழி மற்றும் கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், "ONE STOP CRISIS TEAM" உறுப்பினர்கள் ஆகியோர் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    மதுரை மாவட்ட கலெக்டர் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டு, பொது மக்கள் அதிகம் கூடும். இடங்களான கலெக்டர் அலுவலக வளாகம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம், கடைவீதிகள் மற்றும் ெரயில் நிலையம் ஆகிய இடங்களில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    முன்னதாக 30.1.2023 முதல் 4.2.2023 வரை வருவாய் கோட்டாட்சியர்களின் தலைமையில் தொழிலாளர் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள், கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் அடங்கிய குழுக்களால் செங்கல் சூளைகள் மற்றும் அரிசி ஆலைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகள் மதுரை மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகங்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், பொது இடங்கள், ெரயில்வே மற்றும் பஸ் நிலையங்கள், கடைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் பார்க்கும் வகையிலும் காட்டிவைக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள். தன்னாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்க ளிடையே கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் உள்ளுர் தொலைக்காட்சிகளில் விழிப்புணர்வு வாசகம் மற்றும் உதவி எண் குறித்து தற்போதைய செய்தியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர் எவரேனும் பணிக்கு அமர்த்தப்பட்டது கண்டறியப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கையுடன், 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கபட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்/ கொத்தடிமை தொழிலாளர்) ஒருங்கிணைப்பு அலுவலர் மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×