என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவை முன்னிட்டு ராஜா சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
நன்செய் இடையாறு ராஜா சாமி கோவிலில் மாசித் திருவிழா
- பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறில் உள்ள ராஜா சுவாமி கோவிலில் மாசி மாத திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தொடர்ந்து சாமி உலா வருதல் நிகழ்ச்சி தினசரி நடந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறில் உள்ள ராஜா சுவாமி கோவிலில் மாசி மாத திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சாமி உலா வருதல் நிகழ்ச்சி தினசரி நடந்தது.
நேற்று காலை திருக்கோவில் பூஜையும், மாலை காவடி பூஜையும், மூலவர் அபிஷேகமும் நடைபெற்றது. இதில் ராஜா சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ராஜா சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மாலை திருத்தேர் உலா நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு கொடி இறக்கமும், பாலிகை ராஜா வாய்க்காலில் சேர்த்தல் பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர்கள் மற்றும் அறங்காவலர் குழு, கிருத்திகை கட்டளை குழு மற்றும் கோவில் குடி பாட்டு மக்கள் செய்திருந்தனர்.






