என் மலர்
உள்ளூர் செய்திகள்
லிங்காபுரம்- காந்தவயல் இடையே மோட்டார் படகு சேவை நிறுத்தம்
- பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிந்தது
- கோத்தகிரி, கூடலூர் மாயாறு வழியாகவும் தண்ணீர் பவானி சாகர் அணைக்கு வந்து சேர்ந்தது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய கேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்தது.
இதையொட்டி உள்ள 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் மற்ற பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகளவில் பெய்ததால் கோத்தகிரி, கூடலூர் மாயாறு வழியாகவும் தண்ணீர் பவானி சாகர் அணைக்கு வந்து சேர்ந்தது.
இதனால் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது. அணையின் நீர்தேக்க பகுதிகளான சிறுமுகை, லிங்காபுரம், காந்தயல், லிங்காபுரம் பகுதியில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது. இதனிடையே லிங்காபுரத்தில் இருந்து காந்தவயல், காந்தையூர், மேலூர், ஆலூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து 4 கிராம மக்கள் பயணம் செய்ய பரிசல் பயணம் தொடங்கப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் சென்று வந்தனர். மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து மோட்டார் படகுகள் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் கூடுதலாக இயக்கப்பட்டு வந்தன.
தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளதால் மோட்டார் படகு இயக்கம் குறைந்துள்ளது. இதனால் பரிசல் மட்டுமே இயக்க கூடிய சூழல் உருவாகி உள்ளது. எனவே ஆழியாறு அணையில் இருந்து கொண்டு வரப்பட்ட மோட்டார் படகு மீண்டும் ஆழியாறு அணைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் தண்ணீர் குறைந்தவுடன் விரைவில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்க உள்ளதாக சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.