search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர் சிறையில் அடைப்பு
    X

    கைது செய்யப்பட்ட மேலாளர் பிரகாஷ்

    கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர் சிறையில் அடைப்பு

    • குருசாமிபாளையத்தில்கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
    • சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் நெ.எஸ்.844 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தற்போது 260-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர்.

    இந்த சங்கத்தில் 3 பேர் ஊழியர்களாக இருந்து வருகின்றனர். சங்க உறுப்பினர்களுக்கு பாவு கொடுத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் இலவச வேட்டி சேலைகள் வாங்கி அரசுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் சேலைகள் கோவாப்ரேடிவ் நிறுவனத்திற்கும் அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் குருசாமிபாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் (32) சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் சங்கத்தின் மேனேஜர் (பொறுப்பு) பிரகாஷிடம் பாவு நூல் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் மேனேஜர் பிரகாஷ் ஒரு வேட்டிக்கு ரூ.5 தர வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விருப்பமில்லாத லோகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் லோகநாதன் சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் உடனடியாக சங்கத்திற்குள் நுழைந்து கையும் களவுமாக மேனேஜர் பிரகாஷை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவரிடமிருந்து லஞ்சமாக வாங்கிய ரூ.3 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கணக்கில் வராத ரூ.49 ஆயிரம் வைத்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது பற்றி அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சங்க உறுப்பினர்களிடமிருந்து வசூலித்ததாக மேனேஜர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து லஞ்சம் வாங்கிய பிரகாஷை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×