search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசைத்தறி தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
    X

    பள்ளிப்பாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்ற காட்சி.

    விசைத்தறி தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

    • கடந்த 3 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தம் முடிந்து விட்டதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான புதிய தீபாவளி போனஸ் ஒப்பந்தம் போட வேண்டும்.
    • 3-ம் கட்ட பேச்சு வார்த்தை இரவு 10.30 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இந்த தொழிலில் ஆண்கள், பெண்கள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தம் முடிந்து விட்டதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான புதிய தீபாவளி போனஸ் ஒப்பந்தம் போட வேண்டும். பள்ளிப்பாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே கடந்த 4-ந் தேதி முதற்கட்ட போனஸ் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் 2-ம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. தீபாவளிக்கு இன்னும் 2 நாள் மட்டுமே உள்ளதால் போனஸ் பேச்சு வார்த்தை விரைவில் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று 3-ம் கட்ட பேச்சு வார்த்தை இரவு 10.30 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து பள்ளிபாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி கூறியதாவது:-

    6 மாதங்களுக்கு முன்பு புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டதால் கடந்தாண்டு வாங்கிய போனசை விட இந்தாண்டு தொழிலாளர்களுக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் போன்ஸ் கிடைக்கும். மேலும் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் தேக்கம் அடைந்து தொழில் தொய்வு நிலையில் உள்ளதால் போனஸ் சதவீதம் உயர்த்தினால் மேலும் உரிமையாளர்களுக்கு நெருக்கடி ஏற்படும். கடந்தாண்டு வழங்கியது போல 9.50 சதவீதம் போனஸ் இந்தாண்டும் வழங்கப்படும் என தெரிவித்தோம். ஆனால் தொழிற்சங்கத்தினர் இதனை ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×