search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிராக சிறுதானிய உணவு வழங்கல்
    X

    பாரம்பரிய அரிசி, சிறு தானியங்களில் தயாரிக்கப்பட்ட உணவு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    தஞ்சையில் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிராக சிறுதானிய உணவு வழங்கல்

    • பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களில் உணவு தயாரித்து வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு செறிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிரான பேரியக்கம் சார்பில் பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களில் உணவு தயாரித்து வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் தலைமை வகித்தார்.

    ஒருங்கிணைப்பாளர்கள் பாரதி தாசன், பட்டுக்கோட்டை தங்க குமரவேல், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேல்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் வேலுமணி, விக்னேஷ், அருசீர் தங்கராசு, பொய்யாமொழி, வெள்ளைச்சாமி பாக்கியராஜ் அருண் சுபாஷ், செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு பாரம்பரிய உணவுகளான அரிசி மற்றும் சிறுதானியங்களில் போதிய சத்துக்கள் இருக்கும் போது செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களில் தயிர் சாதம், தக்காளி சோறு, தேங்காய் சாதம், சர்க்கரை பொங்கல், அவல் கஞ்சி போன்ற உணவுகளை தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.

    இது குறித்து ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் கூறும் போது, பாரம்பரிய அரிசி சிறுதானியங்களை கட்டுப்படியான விலையில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

    பொது விநியோகத்திட்டத்தின் மூலமாக பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதற்கட்டமாக 25 சதவீதம் வழங்கிட வேண்டும்.

    பின் படிப்படியாக 100 சதவீதம் வழங்கிட வேண்டும்.

    2023 ஆம் ஆண்டை சிறுதானிய பயிர்களின் ஆண்டாக உலகளவில் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக அரசு சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசார இயக்கங்கள் நடத்திட வேண்டும்.

    பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானியம் போன்ற உணவுப்பயிர்களை சாகுபடி செய்பவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என்றார்.

    Next Story
    ×