search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் கொள்முதல் விலை குறைவு  நாமக்கல்லில் இருந்து வட மாநிலங்களுக்கு  தினமும் 35 லட்சம் முட்டைகள் அனுப்பி வைப்பு
    X

    தமிழகத்தில் கொள்முதல் விலை குறைவு நாமக்கல்லில் இருந்து வட மாநிலங்களுக்கு தினமும் 35 லட்சம் முட்டைகள் அனுப்பி வைப்பு

    • நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
    • இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் முட்டை தொழிலுக்கு பெயர் பெற்று திகழ்கிறது நாமக்கல். இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் முட்டை விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 4½ கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலைக்கு பணியாளர்களிடமிருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்கின்றனர். இந்த முட்டை கொள்முதல் விலையானது தற்போது திருவிழா பண்டிகை காலங்களில் தேவையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் 1-ந் தேதி ரூ.4.10 -க்கு முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    இது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் கொள்முதல் விலை 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

    தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலை 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் நாமக்கல் முட்டை விற்பனையை நிர்ணய ஆலோசனை குழு 30 காசு குறைத்து விற்க பரிந்துரைக்கிறது. அதன்படி ஒரு முட்டையை 480 காசுக்கே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஆனால் ஹைதராபாத் மண்டலத்தில் கொள்முதல் விலை 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட அதே விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.

    இதனால் விலை குறைவாக உள்ள தமிழக முட்டைக்கு அதிக அளவில் ஆர்டர் வழங்குகின்றனர் .தினமும் 10 லோடு என 35 லட்சம் முட்டைகள் இங்கிருந்து மும்பை, கல்கத்தா போன்ற வட மாநிலங்களில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வட மாநிலங்களில் கொள்முதல் விலையை உயர்த்தும்போது தமிழகத்திலும் முட்டை விலை உயர்த்தப்படுகிறது. இனிவரும் நாட்களிலும் முட்டை விலை உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×