search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தொழில் மேம்பாட்டு திட்டத்தில் சுயதொழில் செய்யும் இளைஞர்கள்
    X

    புத்தொழில் மேம்பாட்டு திட்டத்தில் சுயதொழில் செய்யும் இளைஞர்கள்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் புத்தொழில் மேம்பாட்டு திட்டத்தில் இளைஞர்கள் சுயதொழில் செய்கின்றனர்.
    • மேற்கண்ட தகவலை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    படித்து வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ள இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    இந்தத் திட்டத்தின் கீழ், 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.10.00 லட்சம் முதல் 5 கோடி வரை 25சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கப்படுகிறது.

    மேலும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வியாபாரம் , சேவை தொழில்கள் மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்கிட முறையே ரூ.5லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரை 25சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பரமக்குடி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் கூறும்போது, குறைந்த பட்சம் 4 நபர்களுக்காவது, வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய தொழில் தொடங்கிட வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கனவாகவும், லட்சியமாகவும் இருந்தது.

    இந்த நிலையில், தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மிஷின் ஷாப் சேவைகள் தொழில் தொடங்கிட வேண்டி விண்ணப்பித்து ரூ.10 லட்சம் கடனுதவி பெற்றேன். இதற்கு அரசு மானியமாக ரூ.3.84 லட்சம் கிடைத்தது. இதனை கொண்டு தொழில் தொடங்கி தற்போது நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறேன். இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த காளிஸ்வரன் கூறும்போது, நான் பொது சேவை மையம் நடத்துவதற்கு போதிய பண வசதியில்லாமல் இருந்தேன். இந்த நிலையில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ரூ.3.95 லட்சம் வங்கி கடன் பெற்றேன். இதற்கு அரசு மானியமாக ரூ.1.04 லட்சம் கிடைத்தது. இதன் மூலம் சேவை மையம் தொடங்கி நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறேன். இதற்கு உதவிய முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    மேற்கண்ட தகவலை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் தெரிவித்தனர்.

    Next Story
    ×