என் மலர்
உள்ளூர் செய்திகள்
மதம் மாறினால் ரூ.10 கோடி: மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் செல்போன் செயலி மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக அவரிடம் கூறினார். மேலும் இதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்கி வருமான வரி செலுத்துவது உள்ளிட்ட காரணங்களுக்காக கோவில்பட்டி வாலிபரிடம் பணம் கேட்டுள்ளார்.
இதை நம்பிய அவர் ரூ.4 லட்சத்து 88 ஆயிரத்து 159-ஐ ஜி.பே மூலம் கொடுத்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி. உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள்செல்வி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் மோசடியில் ஈடுபட்டது தஞ்சாவூர் ரெட்டி பாளையம் ரோடு ஆனந்தம் நகரை சேர்ந்த ராஜவேல் (வயது 31) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை தூத்துக்குடி போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.
அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், இவருக்கு உடந்தையாக கர்நாடக மாநிலம் பெங்களூரு சிங்கசந்தரா பகுதியை சேர்ந்த கணேசன் (31) என்பரும் இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.