search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.20.35 கோடி - மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில்  தீர்மானம்
    X

    மேயர் ஜெகன் பெரியசாமி.

    தூத்துக்குடியில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.20.35 கோடி - மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

    • தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
    • 12 தீர்மானங்கள் மாநகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கமிஷனர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொட ங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

    கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் ஸ்மார்ட்சிட்டி அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகளை அளவிடு செய்யவும், செலவின பட்டியல் தயார் செய்யவும், பார்வையிடவும் போதிய பணியாளர்கள் இல்லாததால் இளநிலை பொறியாளர்களுக்கு உதவிட ஒவ்வொரு நிலையிலும் என 11 தொழில் நுட்ப உதவியாளர்கள் நகர்ப்புற வாழ்வாதார மையம் மூலம் நியமனம் செய்தல்.

    மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டுரங்கன் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட போதிய இடம் இல்லாததால் சத்திரம் தெரு அம்மா உணவகம் பின்புறம் உள்ள மாநகராட்சி இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 8 ஆரம்ப சுகாதார மையங்களில் நகர்புற வாழ்வாதார மையம் மூலம் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ஊதியம் வழங்குதல், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி, குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு செய்தல் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் 12 சிப்பங்களாக பிரித்து ரூ.20 கோடியே 35 லட்சத்தில் தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாடு திட்டம் 2022-2023-ன் கீழ் மேற்கொள்ளுதல்.

    மாநகராட்சி துணை மேயருக்கு அலுவலக பயன்பாட்டிற்கு ஒதுக்கப்ப ட்டுள்ள வாகனத்தை ஓட்டுவதற்கு தற்காலிக அடிப்படையில் ஓட்டுனர் நியமனம் செய்தல், இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி 2017 -ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களால் திட்ட நிதி மற்றும் பொது நிதியின் கீழ்மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான சரக்கு மற்றும் சேவை கட்டணம் 12 சதவீதம் வழங்க தெரிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மத்திய அரசு கடந்த ஜூலை 13-ந்தேதி அறிவிப்பின்படி சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் 47-வது கூட்டத்தில் ஒப்பந்ததாரர்களின் 12 சதவீதத்திலிருந்து வரி 18 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 18-ந்தேதி . முதல் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக பணியின் தொகைக்கு ஏற்ப உயர்த்தி வழங்குதல் உட்பட 12 தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ்,ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ்,சேகர், ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×