என் மலர்
உள்ளூர் செய்திகள்
சேலம் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் 6,282 கல்லூரி மாணவிகள் தேர்வு
- “புதுமைப் பெண்” என்னும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- “புதுமைப் பெண்” பெட்டகப்பை மற்றும் மாதம் ரூ.1,000 உதவித் தொகை பெறுவதற்கான டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டன.
சேலம்:
பெண் கல்வியை போற்றும் விதமாகவும், அவர்களது உயர்கல்வியை உறுதி செய்து முன்னேற்றப்பதைக்கு அழைத்து செல்ல அடித்தளமாக "புதுமைப் பெண்" என்னும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் கடந்த 5-ந்தேதி நடந்த விழாவில் முதற்கட்டமாக, 17 கல்லூரிகளைச் சேர்ந்த 872 மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் மற்றும் நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய "புதுமைப் பெண்" பெட்டகப்பை மற்றும் மாதம் ரூ.1,000 உதவித் தொகை பெறுவதற்கான டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டன.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும் அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவியர்களாக இருத்தல் வேண்டும்.
மாணவிகள் 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்புகளில் படித்து பின்னர், முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். குறிப்பாக, ஒரு குடும்பத்தில் பிறந்த அனைத்து பெண் குழந்தைகளும் விண்ணப்பிக்கத் தகுதியுடை யவர்கள் ஆவார்கள்.
இத்திட்டத்தின் கீழ் பயனடைய குடும்ப வருமான உச்ச வரம்பு கிடையாது. புதுமைப் பெண் திட்டத்தில், சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு (டிப்ளமோ / ITI), இளங்கலைப் பட்டம், தொழில் சார்ந்த படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு போன்ற படிப்புகளை பயிலும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும், முதலாம் ஆண்டிலிருந்து 2-ம் ஆண்டு செல்லும் மாணவியரும், 2-ம் ஆண்டிலிருந்து 3-ம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில் 3-ம் ஆண்டிலிருந்து 4-ம் ஆண்டிற்குச் செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில் 4-ம் ஆண்டிலிருந்து 5-ம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர். தகுதியுடைய மாணவிகளுக்கு மாதந்தோறும் உயர்கல்வி உறுதித் தொகையாக ரூ.1,000/- வழங்கப்படும்.
அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 6,282 கல்லூரி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதாந்திர உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஏதுவாக, தகுதியுடைய கல்லூரி மாணவிகளுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்குகளில் அவர்களுக்குரிய உதவித் தொகைகள் வரவு வைக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.