search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் குப்பைகளை சரியான முறையில் அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
    X

    கடலூரில் கலெக்டர் அருண் தம்புராஜ் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் சரியான முறையில் வருகிறார்களா? என்பதனை ஆய்வு செய்து பேசினார். அருகில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் காந்திராஜ் உள்ளனர். 

    கடலூரில் குப்பைகளை சரியான முறையில் அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

    தனியார் நிறுவனம் சார்பில் குப்பைகள் அகற்றும் துப்புரவு பணியாளர்கள் அணிவகுத்து நின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு தினம் தோறும் குப்பைகள் அகற்றுவதற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் 162 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றுவதற்கு தனியார் நிறுவனம் மூலம் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் தனியார் நிறுவனம் சார்பில் 335 துப்புரவு பணியாளர்கள் பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதன் காரணமாக மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கால்வாய் சுத்தம் செய்தல், அரசு பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்தல், கொசு மருந்து அடித்தல், குப்பைகளில் உரம் மாற்றுதல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் குப்பை அகற்றும் பணிகளில் ஈடுபடவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் கடந்த மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவரும் குப்பைகள் சரியான முறையில் அகற்றாத தனியார் நிறுவன டென்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று கடலூர் மாநகராட்சியில் நடந்த மருத்துவ முகாமில் கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டார். அப்போது கவுன்சிலர்கள் மீண்டும் கலெக்டர் அருண் தம்புராஜிடம் குப்பைகள் சரியான முறையில் அகற்றவில்லை என மீண்டும் புகார் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் திடீரென்று நேரடியாக வந்தார். அப்போது அங்கு தனியார் நிறுவனம் சார்பில் குப்பைகள் அகற்றும் துப்புரவு பணியாளர்கள் அணிவகுத்து நின்றனர். அப்போது தனியார் நிறுவனம் சார்பில் பராமரித்து வரும் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். மேலும் எத்தனை நபர்கள் வந்துள்ளனர் என கேட்டபோது 294 நபர்கள் வந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் 41 தற்காலிக துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு வரவில்லை என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ் பேசுகையில், கடலூர் மாநகராட்சி தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக தனியார் நிறுவனம் மூலமாக தற்காலிக துப்புரவு பணியாளர்கள் குப்பைகள் அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் பொதுமக்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் குப்பைகள் அகற்றாததால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதோடு, சுகாதாரம் சீரழிந்து வருகின்றது என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.ஆகையால் துப்புரவு பணியாளர்கள் அந்தந்த கவுன்சிலர்களை அணுகி எந்தெந்த பகுதியில் குப்பையில் உள்ளது என்பதனை பார்வையிட்டு அகற்ற வேண்டும். மேலும் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை மக்காத குப்பை என தனியாக பிரித்து வாங்க வேண்டும். ஆகையால் துப்புரவு பணியாளர்கள் தினந் தோறும் குப்பைகளை அகற்றி சுகாதாரமான மாநகராட்சியாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் வருங்காலங்களில் இது போன்ற ஆய்வுகள் அடிக்கடி நடைபெறும் என்பதால் தூய்மை பணியில் சரியான முறையில் ஈடுபட வேண்டும். இந்த நிலையில் ஒரு மாத காலத்திற்குள் தனியார் நிறுவனம் அனைத்து பணியாளர்களையும் நியமித்து சரியான முறையில் குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் தனியார் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்தார். அப்போது மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் காந்தி ராஜ், மாநகர நகர் அலுவலர் எழில் மதனா, துப்புரவு ஆய்வாளர்கள் அப்துல் ஜாபர், கிருஷ்ணராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துனிஷா சலீம், சங்கீதா, பார்வதி, சுபாஷிணி ராஜா, விஜயலட்சுமி செந்தில், பாலசுந்தர், சரவணன், சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×