search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடிப்பெருக்கு விழா- மேட்டூர் காவிரி ஆற்றில்  பக்தர்கள்  புனித நீராடினர்
    X

    ஆடிப்பெருக்கு விழா- மேட்டூர் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர்

    • தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூருக்கு பல ஆயிரம் பேர் வந்து குவிந்திருந்தனர்.
    • அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே பொது மக்கள் முண்டியடித்து செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அனைவரது வாழ்விலும் காவிரி போல மகிழ்ச்சியும், வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று ஆடிப்பெருக்கு நன்னாளில் காவிரிக்கு படையிலிட்டு வழிபாடு செய்வது வழக்கம். மேலும் காவிரி கரையோர மக்கள் கோவிலில் உள்ள சாமி சிலைகளையும் காவிரி ஆற்றுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து நீராட்டி மீண்டும் மேள தாளங்கள் முழங்க கோவிலுக்கு எடுத்து செல்வார்கள்.

    அந்த வகையில், காவிரி கரையோர மக்கள் இன்று அதிகாலை முதலே மேட்டூர் காவிரிக்கு சாரை சாரையாக வர தொடங்கினர். இதனால் காவிரி கரையோர பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. பெரும்பாலான பக்தர்கள் மேட்டூர் காவிரியில் நீராடி மகிழ்ந்தனர்.

    மேலும் பக்தர்கள் தங்களது குல தெய்வங்களை தலையில் சுமந்த படி மேள தாளங்கள் முழங்க மேட்டூருக்கு பக்தர்கள் புடை சூழ நடந்தே வந்தனர். அவர்கள் சாமி சிலைகளை காவிரியில் நீராட்டி மீண்டும் தங்களது கிராமங்களுக்கு மேளதாளங்களுடன் எடுத்து சென்றனர்.

    புதுமண தம்பதியர் தங்களது திருமண மாலைகளை வாழை இலையில் வைத்து வழிபட்டு காவிரி ஆற்றில் விட்டு சென்றனர். இதற்காக தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூருக்கு பல ஆயிரம் பேர் வந்து குவிந்திருந்தனர்.

    மேட்டூருக்கு வந்த பக்தர்களில் சிலர் ஆடு, கோழிகளை பலியிட்டு மேட்டூர் அணைக்கட்டு முனியப்பனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஆடு, கோழிகளை சமைத்து அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கினர்.

    அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே பொது மக்கள் முண்டியடித்து செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி மேட்டூரில் பூங்கா சாலை, கொளத்தூர் சாலைகள் உள்பட பல்வேறு சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காட்சி அளித்தது. அணை பூங்காவிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

    பொது மக்கள் நீராட காவிரி பாலப்பகுதியில் உள்ள 2 படித்துறைகள், மட்டம் பகுதியில் உள்ள 3 படித்துறைகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதிகளில் அதிக அளவில் பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர். காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் மற்ற பகுதிகளில் குளிக்க அனுமதி அளிக்கவில்லை.

    மேட்டூர் நகராட்சி சார்பில் பக்தர்கள் வசதிக்காக தற்காலிக உடை மாற்றும் அறைகள், கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தன. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மேட்டூர் ஆர்.டி.ஓ. தணிகாசலம், டி.எஸ்.பி. மரியமுத்து ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தீயணைப்பு வீரர்கள் 20 பேர் காவிரி கரையில் படகுகளில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். மேலும் 5 பரிசல்கள், ரப்பர் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்காலிக புறக்காவல் நிலையம், முதல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

    5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இது தவிர 12 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு காவல் உதவி மையத்தில் இருந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    திருடர்கள், குற்றவாளிகளை கண்காணிக்க சாதாரண உடையில் குற்றப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆடிப்பெருக்கு விழாவவையொட்டி ஏராளமான தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகளிலும் வியாபாரம் சூடு பிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×