search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை; மின்னல் தாக்கி மாணவன் பலி
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை; மின்னல் தாக்கி மாணவன் பலி

    • கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
    • கெங்கவல்லி, ஆத்தூர், தலைவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மின்னலுடன் கனமழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்ஷன் என அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் சென்றது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    மழையால் சேலம் 5 ரோடு, 4 ரோடு, ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலத்தின் கீழ் இருசக்கர வாகன ஓட்டிகள் குவிந்தனர். இதனால் இப்பகுதியில் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

    புது பஸ் ஸ்டாண்டில் மழைநீர் தேங்கி நின்றதால், பஸ்கள் உள்ளே வர முடியாமலும் வெளியே செல்ல முடியாமலும் ஆங்காங்கே நின்றது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனம் நின்றன.

    பாதாள சாக்கடை பணி நடக்கும் இடங்களிலும் மழைநீர் தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக நெத்திமேடு ஜெயராணி மேல்நிலைப்பள்ளி, பாரதி மருத்துவமனை அருகே, உச்சிபாளையம் கருவாட்டு பாலம் அருகே, மழை நீர் ஆறாக ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன. இதனால் அலுவலகங்களுக்கு சென்று வீடு திரும்புவோர் அவதிப்பட்டனர்.

    மேச்சேரியை சேர்ந்தவர் இளங்கோ மகன் அகிலன் (வயது 14), அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறை ஒட்டி, சேலம் கோட்டை அண்ணா நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.

    நேற்று மாலை பாட்டி வேலைக்கு சென்ற நிலையில் அகிலன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மழை பெய்ததால், வீட்டுக்கு திரும்பிய மாணவன், வீடு பூட்டி இருந்ததால் நனையாமல் இருக்க மாடிப்படியில் நின்றார்.

    அப்போது மின்னல் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புறநகர் பகுதிகளான தம்மம்பட்டி, கரிய கோவில், காடையாம்பட்டி உள்பட பல பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. பனமரத்துப்பட்டியில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் தடைப்பட்டது. இந்த மரங்களை ஊழியர் அகற்றி பின், மின்வினியோகம் சீரானது.

    கெங்கவல்லி, ஆத்தூர், தலைவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மின்னலுடன் கனமழை பெய்தது. அரை மணி நேரத்திற்கு மேல் பெய்த இந்த மழையில், அந்த பகுதிகளில் உள்ள 3 தென்னை மரங்கள் தீப்பிடித்து எறிந்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலம் மாநகரில் 31.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. தம்மம்பட்டி 25, கரியகோவில் 20, காடையாம்பட்டி 18, நங்கவல்லி 15, ஆத்தூர் 12, ஏற்காடு 7.2, எடப்பாடி 6.4, வீரகனூர் 6, ஓமலூர் 4, ஆனைமடுவு 3 என மாவட்டம் முழுவதும் 148 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. நாமக்கல் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேந்தமங்கலம் பகுதியில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் சேந்தமங்கலம்-நாமக்கல் சாலையில் மரம் ஒன்று வேருடன் முறிந்து விழுந்தது.

    இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினர்.

    அதேபோல எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷண நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×