என் மலர்
தமிழ்நாடு

தக்காளி விலை குறைய தொடங்கியது: கிலோ ரூ.65-க்கு விற்பனை
- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 43 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்திருந்தன.
- இன்னும் தக்காளி வரத்து முழுமை ஆகாததால் தக்காளி விலை உச்சம் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று தெரிகிறது.
போரூர்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கிலோ ரூ.100 வரை விற்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்தனர். ஆந்திரா, கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்து இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்பனை நடந்து வருகிறது. வெளிமார்க்கெட்டில் ரூ.100-க்கு விற்ற நிலையில் அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்த தக்காளியின் விலை இன்று சற்று குறைந்து உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.65-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 43 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்திருந்தன. வழக்கமாக 60 லாரிகள் வரை தக்காளி வரும் என்று தெரிகிறது. இன்னும் தக்காளி வரத்து முழுமை ஆகாததால் தக்காளி விலை உச்சம் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று தெரிகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி விலை திடீரென அதிகரித்தது. இதையடுத்து சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100வரை விற்பனை ஆனது. இன்று 43 லாரிகளில் தக்காளிகள் வந்திருந்தன. இதனால் மொத்த விற்பனை கடைகளில் ரூ.65-க்கு தக்காளி விற்பனை ஆனது. வரும் நாட்களிலும் இதே நிலை நீடிக்கும் என்றனர்.