search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில்  பனிமூட்டம்- கடும் குளிர்
    X

    ஏற்காட்டில் பனிமூட்டம்- கடும் குளிர்

    • ஏற்காட்டில் குளிர் மேலும் அதிகரித்து ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.
    • இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வரமுடியாத அளவிற்க்கு பனி மூட்டமும் குளிரும் காணப்படுகிறது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஏற்காட்டில் கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் ஏற்காடு மலை முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மேலும் ஏற்காடு மலைப்பாதையில் புதிது, புதிதாக அருவிகளும் உருவானதால் அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதற்கிடையே இன்று அதிகாலை முதல் ஏற்காட்டில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காட்டில் குளிர் மேலும் அதிகரித்து ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வரமுடியாத அளவிற்க்கு பனி மூட்டமும் குளிரும் காணப்படுகிறது. குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால் சாலையோரங்களில் கம்பளி ஆடைகள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. ஜர்க்கின், குல்லா, சொட்டர், கம்பளி போன்ற உடைகள் விற்பனையாகி வருகிறது.

    பனிமூட்டம் அடர்த்தியாக காணப்படுவதால் மலை பாதையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு நகர்ந்து செல்கின்றன. இந்த குளிர் மற்றும் பனி மூட்டம் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் குளிர், சாரல் மழையை பொருட்படுத்தாமல் கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை தினம் என்பதால் குடும்பம், குடும்பமாக அதிக அளவில் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் ஏற்காட்டில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது.

    குறிப்பாக ஏற்காடு அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, பக்கோடா பாயிண்ட், ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், சேர்வராயன் கோவில் என அனைத்து பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பார்த்து மகிழ்ந்தனர். மேலும் படகு குழாமில் படகுகளில் குடும்பத்துடன் சவாரி சென்று மகிழ்ந்தனர்.

    சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இயற்கையான பொழுது போக்கு இடமாக உள்ளது. இயற்கையான சூழலில் மாசற்ற காற்றை சுவாசித்த படி பூங்காவை சுற்றி பார்ப்பது மனதுக்கு புத்துணர்வை ஊட்டுகிறது. மேலும் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கு பல்வேறு சாதனங்களுடன் குழந்தைகள் பொழுது போக்கு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு இதமான ரம்மியமான சூழல் நிலவுவதால் குழந்தைகளுடன் இன்று காலை முதலே ஏராளமானோர் உயிரியல் பூங்கா வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மான்கள், மயில்கள், குரங்குகள், பறவைகள், முதலைகள், பாம்புகள், பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் செயற்கை நீரூற்று என அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தனர்.

    Next Story
    ×