search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்காலிக தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்
    X

    தற்காலிக தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்

    • தீபாவளி போனஸ் பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
    • தூய்மை பணியாளருக்கு ரூ. 465 வழங்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சுமார் 80,000 மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    மேலும் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பஸ்நிலையம், கிழங்கு மண்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரி, வணிக நிறுவனங்கள், டீக்கடைகள், உணவகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து தினசரி சுமார் 20 டன்னுக்கு அதிகமாக குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகளை சேகரிக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் 77 தற்காலிக, 140 நிரந்தர பணியாளர்கள் பணியில் உள்ளனர்.

    இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.300 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு ரூ.606 ஊதியமாக வழங்க தொகை நிர்ணயம் செய்திருந்ததை துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்க நிர்வாகிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிந்து கொண்டு நகராட்சி நிர்வாகத்திடம் தங்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த மாதம் முதல் தூய்மை பணியாளருக்கு ரூ. 465 வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நகராட்சி நிர்வாகம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ரத்து செய்தது.

    இதையடுத்து தூய்மை பணியாளர்கள் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் தாங்கள் 10 மாதங்களாக பணியாற்றியதற்கு தீபாவளி போனஸ் நகராட்சி பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.

    ஆனால் நகராட்சி ஆணையாளர் அளித்த பதில் தூய்மை பணியாளர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தற்காலிக பணியாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில்: தூய்மை பணியாளர்கள் கூடுதலாக நியமனம் செய்து அவர்களுக்கு ஊதியம் வழங்கினால் எங்களின் பணி சுமை குறையும். இந்த ஆண்டு எங்களுக்கு வழங்க வேண்டிய தீபாவளி போனசும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நகராட்சி ஆணையரை சந்தித்து முறையிட சென்றால் எங்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்காமல் எங்களை அலைக்கழித்து வருகிறார் என்றனர்.

    Next Story
    ×