search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைத்தறி மூலப்பொருள் சந்தை விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும்
    X

    கைத்தறி மூலப்பொருள் சந்தை விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும்

    • சி.ஐ.டி.யூ தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல்
    • கைத்தறி நெசவுத் தொழில் நலிவடையும் மாதங்களில் அரசு நிவாரணம் வழங்கவும் கோரிக்கை

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் பகுதியில் சி.ஐ.டி.யூ தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளன மாநில குழுக்கூட்டம் சிறுமுகையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமை வைத்தார். மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமார், மாவட்டத் தலைவர் சிங்காரவேலு, கோவை மாவட்ட செயலாளர் இ.என்.ராஜகோபால் முன்னிலை வைத்தனர்.

    மாவட்ட பொருளாளர் டி.ஆர்.ராமசாமி வரவேற்றார். காஞ்சிபுரம், கடலூர், பரமக்குடி, தேனி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கைத்தறி சேலை ரகங்களை விசைத்தறியில் நெய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறி செயல்படும் விசைத்தறிகளை பறிமுதல் செய்ய வேண்டும்.

    கைத்தறி சேலைகளின் மூலப் பொருட்களான பட்டு நூல், நூல் ஜரிகை ஆகியவற்றின் சந்தை விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட தொடக்க நெசவாளர் கூட்டுறவு வங்கி தொடங்க வேண்டும்.

    கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும் நிரந்தர அடையாள அட்டை வழங்க வேண்டும். கைத்தறி நெசவுத் தொழில் நலிவடையும் மாதங்களில் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.

    கைத்தறி சேலைகளை சாமானியரும் வாங்குவதற்கு ஏதுவாக ஜி.எஸ்.டி வரிவிலக்கு அளிக்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு வழக்கத்தில் இருந்த மருத்துவ திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் கோவை மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×