என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • 2-ந் தேதி முருகப்பெருமாள் வீட்டை உடைத்து 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • மாமியார்- மருமகளை கட்டிப்போட்டு 62 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 இடங்களில் பெரிய அளவிலான கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது.

    கடந்த 2-ந் தேதி பாளையங்கோட்டை மகாராஜநகரை சேர்ந்த அரசு அதிகாரி முருகப்பெருமாள் என்பவர் வீட்டை உடைத்து 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    நேற்று முன்தினம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி இளங்கோ தெருவை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையான கற்பக வள்ளி என்பவரது வீட்டு கதவின் பூட்டை உடைந்து அங்குள்ள பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் உண்டியல்களையும் எடுத்து சென்றனர்.

    இதேபோல் நேற்று முன் தினம் இரவு தூத்துக்குடி முத்தையாபுரம் தவசி பெருமாள் சாலை அன்னை தெரசா நகரை சேர்ந்த அற்புதராஜ் என்பவரது வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்த மாமியார்- மருமகளை கட்டிப்போட்டு 62 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்குகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் கடையநல்லூர் அருகே சேர்ந்த மரம் பகுதியில் என்ஜினீயர் திருமலை நாதன் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

    எனவே போலீசார் விரைந்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • நெல்லையில் மாவட்ட அளவில் 3 நாள் நடக்கும் தடகள போட்டி பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது.
    • போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.

    நெல்லை:

    பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விளை யாட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நெல்லையில் மாவட்ட அளவில் 3 நாள் நடக்கும் தடகள போட்டி பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது.

    இந்த போட்டியில் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல் உள்பட 79 போட்டி கள் நடத்தப்படுகிறது.

    போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடி வரு கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் செங்கல்பட்டில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் தனியார் மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    • பெண்ணுரிமை பாதுகாப்புக்காக நிறைய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
    • சட்டப்பணிகள் ஆணைகள் குழு என்பது பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதித்துறையே இலவசமாக வக்கீலை நியமிக்கும்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். என்ஜி னீயரிங் கல்லூரியில் இளை ஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

    இதில் கல்லூரி முதல்வர் வேல்முருகன் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். உதவி பேராசிரியர் சதீஷ் குமார் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் திரிவேணி கலந்து கொண்டு பேசியதாவது:-

    சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பெண்ணுரிமை பாது காப்புக்காக நிறைய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பெண்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ப்பட்டு ள்ளது. பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக போக்சோ போன்ற சட்டங்கள் உள்ளன.

    எனவே, சட்டத்தை பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது மிக அவசியம். குடும்ப நல சட்டம் பிரிவு -14 என்பதே பெண்ணுரிமை பாது காப்பதற்காக கொண்டு வரப்பட்டது. ஒரு பெண் தான் சார்ந்த முடிவுகளை தானே எடுப்பதற்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். அதற்கு சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. சமூகம் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    அதனைத்தொடர்ந்து மூத்த வக்கீல் பிரபாகர் பேசுகையில், சட்டப்பணிகள் ஆணைகள் குழு என்பது பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதித் துறையே இலவசமாக வக்கீலை நியமிக்கும். இந்த அமைப்பில் எந்த பிரச்சி னையாக இருந்தாலும் இங்கு அணுகலாம்.

    அவர்கள் சமரச நடுவர் ஒருவரை நியமித்து இரு தரப்பினரையும் அழைத்து பேசி பிரச்சினையை சுமூகமாக தீர்வு காண்பார்கள். இதில் பெண்கள், பட்டியலினத்த வர், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு இலவசமாக சட்ட உதவி வழங்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வேல்முருகன், வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா காபிரியல், உதவி பேராசிரியர் சதீஷ்குமார் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க செயலாளர் டேவிட் ஐ லிங், அனைத்து சங்க பொறுப்பா ளர் சந்தியாகு ஸ்டீபன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஜெபராணியின் பெற்றோர், திருமணத்திற்காக 43 பவுன் தங்க நகைகளும், ரூ.3 லட்சமும் ரொக்கமாக கொடுத்தனர்.
    • ஜெடியாவிற்கு, மனைவி ஜெபராணி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மருதகுளத்தை சேர்ந்த கோவில்ராஜ் மகன் ஜெடியா (வயது 28). இவரது மனைவி ரீட்டா ஜெபராணி (24). இவர்களுக்கு கடந்த மே 5-ந்தேதி திருமணம் நடந்தது.

    அப்போது ஜெபராணி யின் பெற்றோர் 43 பவுன் தங்க நகைகளும், ரூ.3 லட்சமும் ரொக்கமாக கொடுத்தனர். திருமணத்திற்கு பின் இருவரும் மருத குளத்தில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் ஜெடியாவிற்கு, மனைவி ஜெபராணி மீது சந்தேகம் ஏற்பட்டதா கவும், அதனால் அவர் ஜெபராணியை கொடுமை படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதுபோல ஜெடியாவின் தாயார் இந்திராணி, சகோதரி சிபியா ஆகியோரும் உனது அப்பாவிடம் சென்று பணம் வாங்கி வா என்று கொடுமைப்படுத்திய தாகவும் கூறப்படுகிறது.

    அதனைதொடர்ந்து வீட்டை விட்டு சென்று விடு இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

    இதுபற்றி ஜெபராணி நாங்குநேரி மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா இதுதொடர்பாக ஜெப ராணியின் கணவர் ஜெடியா, மாமியார் இந்திராணி, சிபியா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சுப்பிரமணியன் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • இன்று காலை சுப்பிரமணியன் கால்வாயில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

    நெல்லை:

    வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 35). இவர் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.

    இவர் நேற்று வீரவ நல்லூர் அருகே கன்னடியன் கால்வாயில் குளிப்பதற்காக சைக்கிளில் சென்றார். மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் கால்வாய் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு அவரது சைக்கிள் மற்றும் ஆடைகள் மட்டும் இருந்தன.

    இதனால் அவர் கால்வாயில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த உறவினர்கள், வீரவநல்லூர் போலீசார் மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியனை தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இந்நிலையில் இன்று காலை கொட்டாக்குறிச்சி பகுதியில் சுப்பிரமணியன் கால்வாயில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரி சோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கன்னடியன் கால்வாயிலும் கூடுதல் தண்ணீர் திறக்கப் பட்டது. அதில் குளிக்க சென்ற சுப்பிரமணியன் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது.

    • ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி செய்து தர கோரிக்கை வைத்தனர்.
    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டிடம் அமைக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி, ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி சரியாக இல்லாத காரணத்தால் கழிப்பறை வசதி செய்து தருமாறு பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்ட மன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனிடம் கோரிக்கை வைத்தனர்.

    அவர்களது கோரிக்கையையேற்று சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டிடம் அமைக்கப்பட்டது. அதனை பள்ளி மாணவி களின் பயன்பாட்டிற்காக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்த வைத்தார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சந்திரசேகர், செல்லப்பாண்டி, கக்கன், பேரூராட்சி தலைவர் தஸ்லிமா அயூப்கான், ஏர்வாடி நகர காங்கிரஸ் தலைவர் ரீமா பைசல், தி.மு.க. நகர செயலாளர் அயூப்கான்,களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், பாளை வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கனகராஜ், பாளை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கணே சன், வார்டு கவுன்சிலர்கள் அலிமா, ஜன்னத், மீரா சாகிப், தஸ்லிமா முகைதீன், மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்வர் சரீப், ஏர்வாடி காங்கிரஸ் நகர பொருளாளர் பொன் ராஜ், நகர துணை தலைவர் சாகுல் ஹமீது, காங்கிரஸ் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கல்பத்து, காங்கிரஸ் கமிட்டி நிர்வா கிகள் பீர், அப்பாஸ், சினான், ஜாபர் அமானு ல்லா, ஷேக், அப்துல் ரகுமான், மீரான் டேனியல், முத்துராமலிங்கம், சுதா, ஜெயந்தி, லதா மற்றும்

    காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சி தோழமைகள் மற்றும் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 50 அடியை கடந்த நிலையில் இன்று 52.20 அடியாக உயர்ந்துள்ளது.
    • ராமநதி நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 64 அடியாக உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்றும் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் 2 அணைகளுக்கும் வினாடிக்கு 1,895 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 1,354 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பாபநாசத்தில் 22 மில்லி மீட்டரும், சேர்வலாறில் 20 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    பாபநாசம் அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 20 அடிக்கும் மேல் உயர்ந்துள்ள நிலையில் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 95.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையில் 107.15 அடி நீர் இருப்பு உள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 50 அடியை கடந்த நிலையில் இன்று 52.20 அடியாக உயர்ந்துள்ளது. கொடு முடியாறு அணை நீர்மட்டம் நேற்று 28.75 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 34 அடியை எட்டியுள்ளது.

    அதே நேரத்தில் 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் வெறும் 6.75 அடியாகவே உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து எஸ்டேட்டுகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலையில் 41 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஊத்து எஸ்டேட்டில் 37 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 33 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 25 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை குண்டாறு, அடவிநயினார் அணை பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அந்த அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குண்டாறு அணை ஒரு வாரமாக நிரம்பி வழிகிறது.

    அடவிநயினார் நீர்மட்டம் நேற்று 113.75 அடியாக இருந்த நிலையில் இன்று 3 அடி அதிகரித்து 117 அடியை எட்டியுள்ளது.

    ராமநதி நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 64 அடியாக உயர்ந்துள்ளது. குண்டாறு அணையில் மட்டும் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கருப்பாநதியில் 45 அடியை எட்டியுள்ளது. கடனா அணை நீர்மட்டம் 59 அடியாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.

    • மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திய போது சந்தியா மறுத்ததால் வாலிபர் அவரை கொலை செய்தது தெரியவந்தது.
    • தொடர்ந்து தாசில்தார் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள திருப்பணி கரிசல்குளம் மணிமேடை தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் சந்தியா(வயது 18). இவர் நெல்லை டவுன் ரதவீதியில் நெல்லையப்பர் கோவில் அருகே உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் சந்தியா வேலைக்கு சென்றபோது அந்த கடையின் அருகே உள்ள கடையில் வேலை பார்த்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ள தோப்பூரை சேர்ந்த 17 வயது வாலிபர் அவரை கத்தியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார்.

    இதுதொடர்பாக டவுன் போலீசார் அந்த வாலிபரை கைது செய்து நடத்திய விசாரணையில், அந்த வாலிபரும், சந்தியாவும் காதலித்து வந்ததும், 2 மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டதும் தெரியவந்தது. தற்போது மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திய போது சந்தியா மறுத்ததால் அந்த வாலிபர் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    இதற்கிடையே சந்தியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.1 கோடி இழப்பீடு, இடம் உள்ளிட்டவை கேட்டு அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நேற்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊர்வலமாக சென்று பேட்டை ரெயில்வே தண்டவாளம் அருகே மெயின்ரோட்டில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் செய்தனர். இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.

    தொடர்ந்து தாசில்தார் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஆதி திராவிட நலத்துறை துணை கலெக்டர் பெனட் ஆசீர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசு வேலை வழங்குவதற்கு அரசிற்கு பரிந்துரை செய்யப்படும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதற்கட்ட நிதியை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனாலும் இன்று 3-வது நாளாக திருப்பணி கரிசல்குளம் கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த சந்தியாவின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும், வாலிபர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • கீழே விழுந்து மயங்கிய வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளை கே.டி.சி. நகரை அடுத்த முறப்பநாடு அருகே உள்ள ஆறாம்பண்ணை வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் சுப்பிரமணி (வயது 32).

    இவருக்கு திருமணமாகி சிவகாமி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். சுப்பிரமணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்றிரவு சுப்பிரமணி அங்குள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி உள்ளார். பின்னர் மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பியை பிடித்தபோது அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் கீழே விழுந்து மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூட்டத்தில் பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
    • பாளை மண்டலத்துக்குட்பட்ட விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதல்-அமைச்சருக்கு நன்றி

    கூட்டத்தில் பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கடந்த சில கூட்டங்களாக மேயர்- கவுன்சிலர்களிடையே பிரச்சி னைகள் நடந்து வந்த நிலையில், கட்சி தலைமை அறிவுறுத்தல்படி அமைதி யான முறையில் கூட்டம் நடக்க ஏற்பாடு செய்ய ப்பட்டிருந்தது. போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

    மேயர் சரவணன் திருக்குறள் வாசித்து கூட்ட த்தை தொடங்கினார். மகளி ருக்கு மாதாந்திர உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கி யதற்கு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பின்னர் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் உடல்களை அரசு மரியா தையுடன் தகனம் செய்ய வேண்டும் என்று அறிவித்த மைக்கும் நன்றி தெரிவி க்கப்பட்டது. சமீபத்தில் உயிரிழந்த முன்னாள் கவுன்சிலர் காந்திமதி என்ப வருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தீர்மானங்கள் நிறைவேற்றம்

    கூட்டத்தில் 100- க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறை வேற்றப்பட்டது. தொடர்ந்து மேயர் சரவணன் பேசும் போது, தசரா விழா நெருங்கு வதை யொட்டி எந்தெந்த கோவில் களில் தசரா விழா க்கள் கொண்டா டப்படுகி றதோ, அந்தந்த பகுதி களில் உள்ள சிறு பாலங்கள், சாலைகள், வாறு கால்களை சீரமைக்க வேண்டும்.

    மேலும் தசரா விழா கொண்டாடப்பட உள்ள கோவில்களை சுற்றிலும் சுத்தம் செய்வதற்கு மாநக ராட்சி பணியா ளர்களுக்கு அறிவுறுத்த உத்தர விடப்பட்டுள்ளது என்றார்.

    உதவி கமிஷனர் நியமிக்க கோரிக்கை

    மேலப்பாளையம் மண்டல சேர்மன் கதிஜா இக்லாம் பாசிலா பேசுகை யில், கடந்த 2 மாதமாக கூட்டம் நடக்கவில்லை.அனைத்து வார்டுகளிலும் பணிகள் நடக்க வேண்டும் என கவுன்சிலர்கள் எதிர் பார்க்கின்றனர். ஆனால் சில வார்டுகளுக்கு பணிகள் ஒதுக்கப்படவில்லை. எனவே அனைவருக்கும் பணிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த வாரம் மீலாடி நபிக்கு மாநகராட்சி சார்பில் மேலப்பாளையம் மண்டலத்திற்கு கூடுதல் தண்ணீர் வழங்கப்பட்டு மீலாடி நபியை கொண்டாடு வதற்கு வழிவகை செய்த மாநகராட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலப்பாளையம் மண்டலத்துக்கு நிரந்தரமாக ஒரு உதவி கமிஷனர் மற்றும் உதவி பொறியாளர்களை நியமிக்க வேண்டும்.43-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாக்கடை கலந்து குடிநீர் வருகிறது. அதனை சரி செய்ய வேண்டும். புதிய குடிநீர் தொட்டி, கழிவு நீர் ஓடை உள்ளிட்ட பிரச்சி னைகளை தீர்க்க வேண்டும் என்றார்.

    2 உதவி கமிஷனர்கள் புதிதாக நியமனம்

    அதற்கு பதில் அளித்த கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி, தேங்கி கிடக்கும் பணிகளை துரிதமாக முடிக்க 2 உதவி கமிஷனர்கள் மாநக ராட்சிக்கு நியமனம் செய்ய ப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் பொறுப் பேற்பார்கள். இதே போல் பொறி யாளர்களுக்கும் காலி பணியிடம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணியிட மும் நிரப்பப்படும் என்றார்.

    பாளை மண்ட லத்துக்குட்பட்ட விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. முறப்பநாடு பகுதியில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டம் எந்த நிலையில் உள்ளது? அது குறித்து தெரிவிக்க வேண்டும். மேலும் பாதாள சாக்கடை திட்டம் பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று பாளை மண்டல சேர்மன் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, பாதாள சாக்கடை திட்ட பணிகள் சுமார் ரூ.1600 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 பிரிவுகளாக நடைபெற்று வருகிறது.

    இதில் முதல் கட்ட பணிகள் டெண்டர் விட ப்பட்டு பாளை, மேலப்பா ளையம் மண்ட லங்களில் பணி தொடங்கிவிட்டது. அடுத்த 2 கட்டங்களுக்கான டெண்டரும் விரைவில் விடப்படுகிறது. முறப்பநாடு திட்டத்துக்கும் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆர்டர் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் இடம் தேர்வு தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் பேசி வருகிறோம். ஒரு மாதத்தில் அந்த பணிகள் தொடங்கி விடும் என்றார்.

    வழிகாட்டி பலகை

    நெல்லை மண்டல சேர்மன் மகேஸ்வரி பேசுகையில், வார்டு பகுதி முழுவதும் கழிவு நீர் ஓடை பிரச்சினை கடுமையாக உள்ளது. தெரு நாய் பிரச்சி னையால் மக்கள் மிகுந்த சிர மத்திற்கு உள்ளாகி உள்ளனர். பம்பன் குளம் சீரமைப்பு செய்யப்ப ட்டுள்ளது.ஆனால் அங்கு பாதுகாப்பு வசதி இல்லாமல் உள்ளது.

    பேட்டை பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட ஆரம்ப சுகாதர நிலையம் எங்குள்ளது என்றே தெரியவில்லை. அதற்கு வழிகாட்டி பலகை வைக்க வேண்டும். காலையில் கொசு மருந்து அடித்தால் கொசு சாவதில்லை. மயக்கம் மட்டுமே அடை கிறது.மாலை ஒரு வேளை கூடுதலாக கொசு மருந்து அடிக்கவேண்டும் என்றார்.

    தொடர்ந்து 55-வது வார்டு கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் கூறுகையில், தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநகர பகுதியில் அம்ருத் திட்ட த்தின் கீழ் அமைக்கப்ப ட்டுள்ள பூங்காக்களில் விளக்குகள் சரிவர எரியவில்லை. அதனை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    கவுன்சிலர் சந்திரசேகர் பேசுகையில், டவுன் போஸ் மார்க்கெட் இடிக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு அங்கு நூலக கட்டிடம் இருந்தது. தற்போது அங்கு நூல கத்திற்கு கட்டிடம் கிடை யாது என்று தகவல்கள் வந்துள்ளது. எனவே அந்த பகுதியில் மீண்டும் நூல கத்தை அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    கவுன்சிலர் அமுதா கூறுகையில், எனது வார்டு 7 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 14,000 மக்கள் வசித்து வரு கின்றனர். இங்கு அனைத்து சாலைகளும் மோசமாக இருந்து வருகிறது. ராசாத்தி காலனி பகுதியில் ஓடை மிகவும் மாசடைந்து காணப்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தச்சை சுப்பிரமணியன், உலகநாதன், கிட்டு, ரவீந்தர், முத்துலட்சுமி, வரிவிதிப்பு திட்டக்குழு தலைவர் சுதா மூர்த்தி, கோகுல வாணி, ஜெகநாதன், சந்திரசேகர், பவுல்ராஜ், கருப்பசாமி கோட்டையப்பன், அனு ராதா சங்கர பாண்டி யன், வில்சன் மணித்துரை, நித்திய பாலையா, சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டதில் பெருமை அடைகிறேன் என அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பேசினார்.
    • மாமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து மனமாட்சியத்திற்கு இடமில்லாமல் செயல்பட வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் பாளை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அப்துல் வகாப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரம்பரியமிக்க இந்த நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டதில் பெருமை அடைகிறேன். எனது அரசியல் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டது இந்த மாநகராட்சி தான். கடந்த 2006 -ம் ஆண்டு மாநகராட்சி கவுன்சிலராக பொறுப்பேற்றேன். இங்கு மிகவும் திறமையான அதிகாரிகள் உள்ளனர். அவர்களை எல்லாம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    எனது சட்டமன்ற தொகுதிக்கு தேவையான சிறிய அளவிலான கோரிக்கைகளை கமிஷனரிடம் செல்போனில் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுத்தேன். பெரிய அளவிலான கோரிக்கைகளை நேரில் சந்தித்து மனுவாக கொடுத்து வருகிறேன். அதற்கான நடவடிக்கை களும் நிறைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இங்குள்ள மாமன்ற உறுப்பினர்கள் எனக்கு பாதுகாப்பு கவசமாக திகழ்ந்து வருகின்றனர். மாமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து மனமாட்சியத்திற்கு இடமில்லாமல் செயல்பட வேண்டும். மாமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் மக்கள் பணிகளுக்கு வெற்றியை பெற முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கேரளாவில் இருந்து வருகின்ற கனரக வாகனங்களில் மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்து சாலை ஓரங்களில் கொட்டி வருகின்றனர்.
    • கழிவுகளை கொட்டும் டிரைவர்கள், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் காமராஜ் தலைமையில் நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் வினோத் மற்றும் நிர்வாகிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்ட எல்லையான காவல் கிணறு இஸ்ரோவில் இருந்து பணகுடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், வாகைகுளம் மற்றும் நாங்குநேரி செல்லும் வழி ஆகிய இடங்களிலும் நான்கு வழி சாலைகளில் கேரளாவில் இருந்து வருகின்ற பெரும்பாலான கனரக வாகனங்களில் கோழி இறைச்சி, மீன் கழிவு, மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்து சாலை ஓரங்களில் கொட்டி வருகின்றனர்.

    இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்லும் நிலையில் துர்நாற்றம் ஏற்பட்டு அவர்களுக்கு உடல் ரீதியில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கேரளா கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் டிரைவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரிகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    ×