search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடந்த 2 ஆண்டில் திருடுபோன 433 செல்போன்கள் மீட்பு
    X

    திருடு போன செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட காட்சி.

    கடந்த 2 ஆண்டில் திருடுபோன 433 செல்போன்கள் மீட்பு

    • உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
    • திருப்பத்தூர் எஸ்.பி. எச்சரிக்கை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார்களை பெற்று வழக்கு பதிவு செய்து அதன் விவரங்களை திருப்பத்தூர் மாவட்ட சைபர் செல் பிரிவிற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    சைபர் செல் பிரிவினர் மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்போன் தொலைத்தவர்களின் 170 செல்போன்களை சைபர் செல் பிரிவினர் கண்டுபிடித்தனர்.

    மேலும் கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை உரியவரிடம் வழங்கும் நிகழ்ச்சி ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வரவேற்றார். ஆயுதப்படை டிஎஸ்பி விநாயகம், சைபர் செல் பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்போன்களை தொலைத்த செல்போன் உரிமையாளர்கள் மற்றும் அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் செல்போன் உரிமையாளர்களை அழைத்து உரியவரிடம் ஒப்படைத்தார். இதனை பெற்றுக் கொண்ட செல்போன் உரிமையாளர்கள் போலீசாருக்கு நன்றியை தெரிவித்தனர்.

    இதனை அடுத்து தொலைந்த செல்போன்களை துரிதமாக செயல்பட்டு செல்போன்களை மீட்ட சைபர் செல் பிரிவு போலீசாரை எஸ்பி ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்.

    சட்ட விரோதமாக திருட்டு செல்போன்களை விற்பனை செய்வதும் அதை வாங்கி உபயோகிப்பதும் சட்டப்படி குற்றமாகும்.

    இது போன்ற செயல்களில் யாராவது ஈடுபடுவது சம்பந்தமாக தகவல் கிடைக்கப்பெற்றால் உடனடியாக அந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் உதவி எண் மற்றும் வாட்ஸ் அப் எண் 9442992526 போன்றவற்றிற்கு புகார் தெரிவிக்கலாம்.

    மேலும் புகார் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் கடந்த 2021 -ம் ஆண்டில் 17 லட்சத்து 10 ஆயிரத்து 800 மதிப்புள்ள 100 செல்போன்களும், 2022-ல் 37 லட்சத்து 49 ஆயிரம் மதிப்புள்ள 163 செல்போன்களும், 2023 கடந்த 3 மாதத்தில் 40 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 170 செல்போன்கள் என மொத்தமாக 58 லட்சத்து 67 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பில் 433 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

    Next Story
    ×