என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![செய்யாற்று மணலில் பழமையான கோவில் புதைந்துள்ளதா? செய்யாற்று மணலில் பழமையான கோவில் புதைந்துள்ளதா?](https://media.maalaimalar.com/h-upload/2023/03/06/1845683-tvm001.webp)
கலசப்பாக்கம் அருகே செய்யாற்றில் கோவில் புதைந்திருப்பதாக கூறப்படும் இடத்தை படத்தில் காணலாம்.
செய்யாற்று மணலில் பழமையான கோவில் புதைந்துள்ளதா?
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் எலத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் மாசிமகம் திருவிழா நடத்துவதற்காக பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வந்தது. இதனையொட்டி அருகில் தீர்த்தவாரி நடைபெறும் செய்யாற்றில் பொக்லைன் எந்திரம் கொண்டு சமன் செய்யப்பட்டது. அப்போது அங்கு மண்ணில் பெரிய பெரிய கற்கள் சிக்கி உள்ளன. அதன்பிறகு சிறிது தூரத்தில் பக்கவாட்டில் தோண்டிய போது பழமையான செங்கல் சுவர் இருப்பது தெரியவந்தது. உடனடியாக பொக்லைன் எந்திரத்தின் பணி நிறுத்தப்பட்டது.
அந்த இடத்தில் பழமை வாய்ந்த கோவில் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்பட்டதால் அதுகுறித்து வருவாய்த்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) வருவாய்த்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்ய உள்ளதாகவும், அதன்பிறகே அந்த இடத்தை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இது பற்றி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:-
எலத்தூர் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் பல ஆண்டுகளாக திருவிழாக்கள் நடத்தப்படாமல் இருந்து வந்தது. தற்போது இந்த ஆண்டு திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் செய்யாற்றின் கரை ஓரம் சமன் செய்தபோது அங்கு கற்கள் இருப்பது தென்பட்டது.
மேலும் கோவிலின் மேல் மட்டம் இருப்பது போன்றும், பக்கவாட்டில் அந்த காலத்தில் கட்டப்பட்ட செங்கல் சுவர்கள் இருப்பது போன்றும் தெரியவந்தது. உடனடியாக வருவாய்த்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தோம். அவர்கள் முன்னிலையில் இதை சுற்றி பள்ளம் எடுத்து பார்த்தால் தான் கோவில் உள்ளதா என்பது தெரியும்.
இச்சம்பவம் கிராமத்து பொது மக்களிடையே ஒரு பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.