search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் சாலையோரங்களில் தேங்கும் தண்ணீரை அகற்ற 150 இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு
    X

    திருச்சியில் சாலையோரங்களில் தேங்கும் தண்ணீரை அகற்ற 150 இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு

    • மழைக்காலங்களில் சாஸ்திரி ரோடு, தில்லை நகர், சங்கிலி ஆண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து விடும்.
    • பொது இடங்களில் வெள்ள நீர் தேங்குவதை தடுப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

    திருச்சி :

    திருச்சி மாநகராட்சியின் பல பகுதிகள் மழைக்காலங்களில் வெள்ளைக்காடாக மாறிவிடும். குறிப்பாக சாஸ்திரி ரோடு, தில்லை நகர், சங்கிலி ஆண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து விடும். இதனால் போக்குவரத்துக்கு தடை ஏற்படும்.

    இந்த நிலையில் சாலைகள் மற்றும் பொது இடங்களில் வெள்ள நீர் தேங்குவதை தடுப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

    அந்த அடிப்படையில் சாலை ஓரங்களில் மட்டும் 150 இடங்களில் இந்த மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி செயற்பொறியாளர் சிவ பாதம் இன்று தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும் போது,

    மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து சாலையோரம் 40 மீட்டர் ஆழத்துக்கு குழாய் பதிக்கிறோம். அதன் பக்கவாட்டில் ஓட்டைகள் போடப்படுகிறது. பின்னர் அந்த குழாயில் மணல் அல்லது ஜல்லி நிரப்பி விடுகிறோம். இதன் மூலம் அப்பகுதியில் தேங்கும் மழை நீர் நிலத்தடிக்கு செல்ல வாய்ப்பு உருவாகிறது.

    பாதாள சாக்கடை திட்ட பணிகளால் இந்த மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் சில இடங்களில் தண்ணீர் செல்வதற்கு தடையாக இருந்தது. அதனையும் சீர் செய்ய நடவடிக்கை எடுத்து இருக்கின்றோம்.

    மாநகராட்சியின் 375 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உள்ளன. ஆகவே இந்த முறை மழைக்காலங்களில் சாலைகளில் அதிகம் தண்ணீர் தேங்குவது தடுக்கப்படும்.

    இந்த மாநகராட்சி பொருத்தமட்டில் 23 ஆயிரத்து 746 வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளது. மேலும் அதன் முக்கியத்துவத்தை மாநகர வாசிகளுக்கு வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

    Next Story
    ×