என் மலர்
உள்ளூர் செய்திகள்

வியாபாரி வீட்டில் நகை கொள்ளை
- வியாபாரி வீட்டில் நகை கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டப்பகலில் துணிகரம்
திருச்சி:
திருச்சி சோமரசம்பேட்டை வாசன் நகர் 5-வது கிராஸ் சேர்ந்தவர் சத்யநாராயணன்(வயது 57). இவர் தனது வீட்டில் ஒரு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தனது மனைவி ஆனந்தியை(53) கடையை பார்க்க சொல்லிவிட்டு, காந்தி மார்க்கெட்டுக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்று விட்டார்.
அப்போது கடைக்கு வந்த மர்மநபர் , சில பொருட்களை வாங்கி விட்டு தனக்குத் தாகம் எடுப்பதாகவும் தண்ணீர் வேண்டும் என்று ஆனந்திடம் கேட்டுள்ளார். ஆனந்தி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவர் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போது அதே பகுதியில் ஒன்பதாவது கிராசில் இருக்கும் தனது தோழியின் வீட்டிற்கு கடையை பூட்டாமல் சென்று விட்டார்.
அவர் சென்றதை அறிந்த மர்ம நபர் கடையின் வழியாக வீட்டினுள் புகுந்து, பூட்டாமல் இருந்த பீரோவில் இருந்து 2 பவுன் ஆரம் மற்றும் 2 பவுன் மதிப்புள்ள தங்க சங்கிலி ஆகியவற்றை திருடி சென்று விட்டார். தோழியின் வீட்டிற்கு சென்று திரும்பி ஆனந்தி, வீட்டின் உள்ளே சென்ற போது பீரோவில் இருந்த துணிமணிகள் கலைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவை சோதித்துப் பார்த்தபோது உள்ளே வைத்திருந்த நகைகள் காணவில்லை. இதுகுறித்து சோமரசம்பட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடி கேமராவை வைத்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
பட்டப் பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






