என் மலர்
உள்ளூர் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வாயில் வெள்ளை துணி கட்டி வந்த கிராமமக்கள்
- அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றாமல் பஞ்சாயத்து தலைவர் புறக்கணித்து வருவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
- கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து 50 அடி தூரத்திற்கு தடுப்பு அமைத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர்.
வாயில் துணி கட்டி...
பாளை யூனியன் ராமையன்பட்டி பஞ்சாயத்து 4-வது வார்டு உறுப்பினர் மாரியப்பபாண்டியன் பொதுமக்களுடன் வாயில் வெள்ளை துணி கட்டி வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
4-வது வார்டுக்குட்பட்ட அரசு புதுக்காலனி, சிவாஜிநகர், சைமன்நகர், பாலாஜிநகர், காவேரி கார்டன், வேப்பன்குளம், மணிநகர் உள்ளிட்ட பணிகளில் 165 தெருக்கள் உள்ளது. ஆனால் எங்கள் 4-வது வார்டு முழுவதும் எந்த அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றாமல் பஞ்சாயத்து தலைவர் புறக்கணித்து வருகிறார்.
இதுதொடர்பாக பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
மற்றொரு மனு
தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் அம்பை தாலுகாவுக்கு உட்பட்ட பொன்மாநகர் பகுதி மக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், அம்பை தாலுகா அலுவலகத்தில் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் அளிக்கும் அடிப்படை வசதிகள் தொடர்பான புகார் மனுக்களை நிராகரித்து வருகின்றனர். எனவே அத்தகைய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராமம் பகுதி மக்கள், வரைமுறை பட்டா கேட்டு கடந்த ஆண்டு விண்ணப்பித்தும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிப்பு போன்ற தற்கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் யாரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து நுழைவு வாயிலில் இருந்து 50 அடி தூரத்திற்கு தடுப்பு அமைத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆனால் ஒரு சில போலீசார் ஆஜராக்கிரதையாக செயல்பட்டு செல்போனில் பேசியபடி சோதனை செய்து வருகிறார்கள். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டதால் இன்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் மனுக்கள் கொடுத்த பொதுமக்களுக்கு ரசீது வழங்கும் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் வரிசையில் நின்று ரசீது பெற்று சென்றனர்.








