என் மலர்
உள்ளூர் செய்திகள்
வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்
- வெம்பக்கோட்டை யூனியனில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
- இந்த ஆய்வின் போது செயற்பொறியளார் (வைப்பாறு) கணபதி ரமேஷ், வட்டாட்சியர் ரங்கநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெம்பக்கோட்டை யூனியன் எதிர்கோட்டை கிராம நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி, பருப்பு மற்றும் அவைகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
ஆலங்குளம் கிராம அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். கல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு மருத்துவமனையில், அனைத்து விதமான நோய்கள், தொற்றா நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து கேட்டறிந்தார். உயர்சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கவும் கலெக்டர் மருத்து வர்களை அறிவுறுத்தினார்.
கல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் கலந்துரையாடிய கலெக்டர், அவர்களின் லட்சியம் குறித்து கேட்டறிந்து, ஆசிரியர்களிடம் இடைநிற்றல் மாணவர்களின் விபரம் குறித்து கேட்டறிந்தார். அவர்கள் பள்ளி கல்வியை தொடர தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
குண்டாயிருப்பு ஊராட்சியில் கனிமவள நிதி திட்டத்தின் கீழ், திருநங்கைகளுக்கான 21 தொகுப்பு வீடுகள் ரூ.128.1 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்து, திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு அலுவ லர்களை அறிவுறுத்தினார்.
வெம்பக்கோட்டையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பில் மியாவாக்கி முறையில் பெருமளவு மரக்கன்று நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெம்பக்கோட்டை வட்டம், மேட்டுக்காட்டில் தொல்லியல் துறை மூலம் நடைபெற்று வரும் முதல்கட்ட அகழாய்வு குழிகளையும், அதில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்து, 2-ம் கட்ட அக ழாய்வு பணி நடைபெற இருக்கும் இடம் குறித்து கேட்டறிந்தார்.
வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளான ஆதார் இணைப்பு, வேளாண் கணக்கெடுப்பு, இ-அடங்கல், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.
வெம்பக்கோட்டை அணையில் நீர் இருப்பு, நீர்வரத்து, வரத்து கால்வாய், மதகுகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள், பயன்பெறும் பாசன நிலங்கள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது செயற்பொறியளார் (வைப்பாறு) கணபதி ரமேஷ், வட்டாட்சியர் ரங்கநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.