search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலிதீன் பைகள் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு
    X

    பாலிதீன் பைகள் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு

    • பாலிதீன் பைகள் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.
    • சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதித்து கடந்த 2016-ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல முறை வாரச்சந்தை, வணிக நிறுவனங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் பயன்படுத்துவதற்கு தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தற்போது அதிகாரிகள் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டதால் மீண்டும் பாலிதீன் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டினம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில இறைச்சிக் கடை களிலும், மீன் கடைகளிலும், ராமநாதபுரம் வாரச் சந்தையிலும் பாலிதீன் பைகளை வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.

    ஒரு முறை பயன்படுத்தி விட்டு குப்பையில் வீசி எறியப்படும் பாலிதீன் பைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இவற்றை பறிமுதல் செய்ய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. வாரச்சந்தை நடைபெறும் புதன்கிழமை அன்று ஆயிரக்கணக்கான மக்களுக்கு பாலிதீன் பைகளில் வியாபாரிகள் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

    இது தவிர மீன், கோழி, ஆட்டிறைச்சி கடைகளில் பாலிதீன் பைகளில் இறைச்சி வழங்கப்படுகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன் பைகளில் பொருட்கள் வழங்குவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.

    சுற்றுச்சூழல், நிலத்தடி நீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பயன்படுத்தபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அதற்கு பதிலாக மஞ்சள் பை, சணல் பைகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×