search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்குவது எப்போது?
    X

    வெம்பக்கோட்டையில் நடந்த அகழாய்வு பணி.

    2-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்குவது எப்போது?

    • வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வை உடனே தொடங்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • கடந்த செப்டம்பர் மாதத்தில் முதல்கட்ட பணிகள் நிறைவடைந்தது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜய கரிசல்குளம் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் கடந்த மார்ச் மாதத்தில் அகழாய்வு பணிகள் நடந்தது.

    அதில் ஏராளமான சங்கு வளை யல்கள், அயல் நாட்டு வர்த்தகத்திற்கு பயன்படுத் தக்கூடிய முத்திரைகள், சதுரங்க கட்டைகள், சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய சில்வட்டுகள், விசில், அணிகலன்கள், பெண்கள் அணியக்கூடிய தங்க ஆபரணங்கள், மண்பானைகள், தங்க காசுகள், சூது பவளம் தக்கலி, சுடுமண்ணால் ஆன பொம்மைகள், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பண்டைய கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

    இதற்காக 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. 15 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதத்தில் பணிகள் நிறைவடைந்தது. முதலாவது அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விருது நகரில் நடந்த புத்தக கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன.

    அதை ஏராளமானோர் பார்வையிட்டனர். புத்தக கண்காட்சியில் சில பொருட்கள் மட்டுமே பார்வைக்கு வைக்கப் பட்டன. முழுமையாக எடுக்கப்பட்ட பொருட்களை சிவகாசி அல்லது வெம்பக் கோட்டையில் அருங்காட்சியமாக வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    2-வது கட்ட அகழாய்வு பணி ஜனவரி மாதத்தில் தொடங்கப்படலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். ஆனால் இன்னும் 2-வது கட்ட பணி தொடங்கப்படாமல் உள்ளது. எப்போது தொடங்கும் என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லை.

    2-வது கட்டப்பணி தொடங்கினால் மேலும் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஏராளமான பொருட்கள் கிடைப்பதுடன் பண்டைய கால மக்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2-ம் கட்ட அகழாய்வை உடனே தொடங்க வேண்டும் என்பதே தொல்லியல் ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.

    Next Story
    ×