search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை பெரிய கோவில் பகுதியில் பரந்த அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும்- மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்
    X

    தஞ்சை மாநகராட்சி கூட்டம் மேயர் சண்.இராமநாதன் தலைமையில் நடந்தது.

    தஞ்சை பெரிய கோவில் பகுதியில் பரந்த அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும்- மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்

    • நான்கு சாலையில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்.
    • வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.2920 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார்.

    துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு:-

    எதிர்கட்சி தலைவர் மணிகண்டன்: திலகர் திடலில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு எந்தவித ரசீதும் கொடுக்காமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அங்கு முறையாக ரசீது கொடுத்து கட்டணம் வாங்க வேண்டும்.

    மாநகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும்.

    மஞ்சப்பை திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ராஜக்கோரி இடுகாட்டு வளாகத்தில் தமிழீழ விடுதலை புலிகள் போராளி போசன் கல்லறை இடிக்கப்பட்டுள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் கோபால் : மேலவீதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். உடனடியாக சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். மேலும் வாரத்தில் சில நாட்கள் குறைந்த அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    அதனை முறைப்படுத்தி சரியான அளவில் குடிநீர் விநியோகிக்க வேண்டும். நான்கு சாலையில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். பணிகள் அனைத்தையும் துரிதமாக முடிக்க வேண்டும்.

    யு.என்.கேசவன் : நவ்ரங் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். ராமநாதன் ரவுண்டானா பகுதியில் 5 சாலைகள் செல்கிறது. அதில் ஒரு இடத்தில் தான் வேகத்தடை உள்ளது. மீதமுள்ள 4 இடங்களிலும் வேகத்தடை அமைக்க வேண்டும்.

    கண்ணுக்கினியாள் : எனது வார்டில் பூச்சந்தை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக்கை அகற்ற வேண்டும்.

    சரவணன் : சீனிவாசபுரத்தில் குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

    காந்திமதி : மீன் மார்க்கெட்டை சரி செய்ய வேண்டும். வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியில் ஆக்கிரப்பை அகற்றுவதாக இருந்தால் முன் அறிவிப்பு செய்ய வேண்டும்.

    இதேப்போல் கவுன்சிலர்கள் ஜெய்சதீஷ் உள்பட பல்வேறு கவுன்சிலர்களும் தங்களது வார்டு சம்பந்தபட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

    துணை மேயர் அஞ்சுகம் பூபதி பேசும்போது:-

    கரந்தை பகுதியில் நீர்தேக்க தொட்டியை தரமான முறையில் சுத்தம் செய்த ஒப்பந்தகாரர் ரவியை மாநகராட்சி பாராட்டுகிறது.

    ராஜகோரி மயானத்தில் போராளி போசன் கல்லறை இடிந்து கிடப்பதாக வந்த தகவலை அடுத்து மாநகராட்சி சார்பில் உடனடியாக சென்று கல்லறை சீரமைக்கப்பட்டது.

    சாலையோரம் வியாபாரம் செய்ய அனுமதிக்கபட்ட பகுதி, அனுமதிக்கப்படாத பகுதி என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு மேயர் சண்.ராமநாதன் பதில் அளித்து பேசியதாவது ;-

    தஞ்சை பெரிய கோவில் புகழ் பெற்றது. இங்கு தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது இங்கு வாகன பார்க்கிங் பிரச்சினை உள்ளது.

    சிறிய இடமாக உள்ளதால் பலரால் வாகனங்களை நிறுாத்தி வைக்க முடியவில்லை. எனவே இனி பெரிய கோவில் பகுதியில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. திலகர் திடலில் உரிய முறையில் ரசீது கொடுத்து தான் வாகன பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    வருகிற 1-ந் தேதி முதல் மாநகராட்சி பகுதியில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் சம்பந்தபட்ட உரிமையாளர்களுக்கு முதல் கட்டமாக ரூ.3000 அபராதம் விதிக்கப்படும்.

    அதற்கு அடுத்தும் மாடுகளை சுற்றி திரிய விட்டால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.

    மாநகராட்சியில் 51 வார்டுகளிலும் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.2920 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    போசன், பட்டுக்கோட்டை அழகிரி கல்லறைகள் பேணி பாதுகாக்கப்படும்.

    கவுன்சிலர்கள் முன்வைத்த கோரிக்கைகளை அனைத்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×