search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    இன்று இரவு நிறைவு பெறும் திருப்பதி பிரம்மோற்சவ விழா
    X

    இன்று இரவு நிறைவு பெறும் திருப்பதி பிரம்மோற்சவ விழா

    • நேற்று இரவு ஏழுமலையான் தங்க குதிரை வாகனத்தில் பவனி வந்தார்.
    • திருப்பதியில் நேற்று 71,443 பேர் தரிசனம் செய்தனர். 26,948 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 4-ந்தேதி கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை கடந்த 8-ந்தேதி நடந்தது. தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்தார். ஒரே நாளில் 4 லட்சம் பக்தர்கள் கருட சேவையில் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை ஏழுமலையான், ஸ்ரீதேவி, ஸ்ரீதேவி சமேதராய் பிரம்மாண்ட தேரில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.

    ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். கடல் அலையைப் போல் குவிந்து இருந்த பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி பரவசம் பொங்க விண்ணதிரும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

    நேற்று இரவு ஏழுமலையான் தங்க குதிரை வாகனத்தில் பவனி வந்தார். இன்று காலை வராக சாமி கோவில் அருகே உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்கியவாறு சக்கரத்தாழ்வாரை புஷ்கரணிக்கு கொண்டு சென்று தீர்த்தவாரி செய்தனர்.

    சக்கரத்தாழ்வாருக்கு 1,200 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான மலர்கள் கொண்டு மலர் அபிஷேகம் நடந்தது.

    லட்சக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் நீராடினர். அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, நீச்சல் வீரர்கள் 20 மீட்டருக்கு ஒருவர் என நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    புஷ்கரணியில் நீராட செல்லும் பக்தர்கள் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீராட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இன்று இரவு கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

    பிரம்மோற்சவ விழா தொடக்க நாளில் இருந்து நேற்று வரை ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் காலை முதல் இரவு வரை 404 பஸ்கள் 13,566 தடவை இயக்கப்பட்டது.

    8 லட்சத்து 50 ஆயிரத்து 85 பக்தர்கள் பயணம் செய்தனர். இதன் மூலம் ஆந்திர அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.6.81 கோடி வருவாய் கிடைத்தது. நேற்று குறைந்த அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து இருந்தனர்.

    திருப்பதியில் நேற்று 71,443 பேர் தரிசனம் செய்தனர். 26,948 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    ரூ.2.52 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×