என் மலர்
இந்தியா

கத்தாரில் இருந்து பெங்களூருவுக்கு ரூ.38 கோடி போதைப்பொருள் கடத்தல்: பெண் கைது
- பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு.
- அவரது பெயர் மற்றும் விபரங்களை இன்னும் வெளியிடவில்லை.
பெங்களூரு:
துபாயில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்தி வந்த நடிகை ரன்யாராவ் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து வரலாறு காணாத வகையில் தற்போது பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கத்தாரில் இருந்து நேற்று கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இருந்த ஒரு பெண்ணின் உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அதில் 3.2 கிலோ எடை கொண்ட கோகைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.38.4 கோடி ஆகும். இதையடுத்து அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தி வந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவரது பெயர் மற்றும் விபரங்களை இன்னும் வெளியிடவில்லை. பெங்களூருவில் அவர் யாரிடம் சேர்க்க போதைப்பொருள் கடத்தி வந்தார் என்றும் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
தங்க கடத்தல் வழக்கு பரபரப்பு அடங்குவதற்குள் ரூ.38.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கி இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.