என் மலர்
தமிழ்நாடு

காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் சென்னையில் நாளை ஆலோசனை- கே.எஸ்.அழகிரி தலைமையில் கூட்டம்
- கடந்த செப்டம்பர் 7-ந்தேதி ராகுல்காந்தியின் பாதயாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கியது.
- ராகுல் காந்தியின் நடைபயணத்தை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி நாளை ஆலோசனை நடத்துகிறது.
சென்னை:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 7-ந்தேதி ராகுல்காந்தியின் பாதயாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கியது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா வழியாக டெல்லிக்கு நடைபயணம் சென்றார்.
ஜனவரி 3 முதல் உத்தரபிரதேசத்தில் இருந்தும், 10-ந்தேதியில் பஞ்சாப்பில் இருந்தும், இறுதியாக காஷ்மீரில் இருந்து 20-ந்தேதியும் பாத யாத்திரையை தொடங்குகிறார்.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி நாளை ஆலோசனை நடத்துகிறது.
சத்திய மூர்த்தி பவனில் காலை 10 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத் இதில் கலந்து கொள்கிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் தொடர்ச்சியாக "அரசியலமைப்பை பாதுகாப்போம்' மற்றும் "கையோடு கை கோர்ப்போம்" ஆகிய மாபெரும் பிரசாரத்தை மக்களிடம் கொண்டு செல்வது சம்பந்தமாக இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.