என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குட்கா முறைகேடு வழக்கு: கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு கோர்ட்டு அவகாசம்
    X

    குட்கா முறைகேடு வழக்கு: கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு கோர்ட்டு அவகாசம்

    • கடந்த 2016-ம் ஆண்டு மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியை பறிமுதல் செய்தனர்.
    • வழக்கிற்கு தொடர்பில்லாமல் முடக்கப்பட்ட அசையா சொத்துக்களை விடுவிக்க வேண்டுமென குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் புகையிலை பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.

    சென்னை ஐகோர்ட்டு, இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் சி.பி.ஐ. போலீசார் சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

    அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. என வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.

    இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஜூலை 19-ந்தேதி அனுமதி வழங்கியது.

    இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு கடந்த முறை சென்னை சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ. தரப்பில் 11 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    அந்த கூடுதல் குற்றப் பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருந்ததால் அதனை திருத்தம் செய்தும் சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலம் குறித்த விபரங்களை இணைத்தும் தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இதுவரை 7 பேருக்கு எதிராக வழக்கை நடத்த மட்டுமே மத்திய-மாநில அரசுகளிடம் அனுமதி பெற்றிருப்பதாக சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த பிழைகளை முழுமையாக திருத்தி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் யார் யாருக்கு எதிராக வழக்கை நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 10-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

    இதனிடையே இந்த வழக்கிற்கு தொடர்பில்லாமல் முடக்கப்பட்ட அசையா சொத்துக்களை விடுவிக்க வேண்டுமென குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கின் திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்யாத நிலையில் சொத்துக்களை விடுவிக்க முடியாது என மறுத்துவிட்டார்.

    Next Story
    ×